பாலு மகேந்திரா படங்களுக்கு இசையமைக்கும்போது தனக்கு தனி மகிழ்ச்சி ஏற்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
தனக்குப் பிடித்தமான இயக்குநர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்றும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“ஒருசில இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்கும்போது மனத்திற்கு இதமாகவும் நிம்மதியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட உணர்வை எற்படுத்தக்கூடிய படங்களைத் தந்தவர் பாலு மகேந்திரா.
“அதனால், அவரது படங்களுக்கான பாடல்களைக் கூடுதல் ரசனையோடு உருவாக்குவேன். அவரது இயக்கத்தில் உருவாகும் இரு படங்களுக்கான இடைவெளிக்குள் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்.
“ஆனால், அந்தப் படங்களைவிட பாலு மகேந்திராவின் படைப்புகளுக்கு இசையமைக்கும்போது இனம்புரியாததோர் மகிழ்ச்சி ஏற்படும். முழு சுதந்திரத்துடன் அவருக்காக இசையமைப்பேன்,” என்கிறார் இளையராஜா.

