முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகள் இமயா தற்போது கோலிவுட்டில் நடிகையாகிவிட்டார். கிஷோர் குமார் இயக்கியிருக்கும் ‘ஹார்ட்டின்’ படம் மூலம் அவர் நடிகையாகி இருக்கிறார்.
இந்தப் படத்தில் சனத் ஹீரோவாக நடிக்கிறார். மடோனா செபாஸ்டியன், இமயா என்று இரண்டு கதாநாயகிகள் உள்ளனர்.
‘ஹார்ட்டின்’ பட விழாவில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இமயா பதில் அளித்தார்.
தமிழக முதல்வர் விஜய் ஒரு ‘ஹீரோ’. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ‘ஹீரோ’. இந்த இருவரில் யார் படங்களை பார்த்து வளர்ந்தீர்கள். யாரை பிடிக்கும் என்று இமயாவிடம் கேட்கப்பட்டது.
விஜயண்ணாவா உதயண்ணாவா என்று கேட்டதும் குளிர்ச்சியாய்ச் சிரித்துவிட்டு, “நான் சூர்யா ரசிகர்,” என்றார் இமயா தென்னரசு.
சூர்யா பெயரிலேயே சூரியன் இருப்பதாலா என்று கேட்டதும் அவர் சிரித்துவிட்டாராம்.
நடிகையாக இமயா ஆசைப்பட்டதுமே, ‘போமா தாயி, போய்ப் படங்களில் நடி’ என்று அவரது குடும்பத்தார் அனுப்பி வைக்கவில்லையாம். நடிப்பெல்லாம் வேண்டாம், சினிமா வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், தன் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார் இமயா. அதன்பிறகே சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர் பட வாய்ப்புகளைத் தேடி, படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வந்தார் இமயா.
தொடர்புடைய செய்திகள்
அந்த நேரத்தில்தான் ‘ஹார்ட்டின்’ படக் குரல்தேர்வுக்குச் சென்று நடித்துக் காட்டி தேர்வாகியிருக்கிறார். தங்கம் தென்னரசு மகள்தான் இமயா என்று தெரியாமலேயே அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். தேர்வு செய்த பிறகே இவர் யார் மகள் என்பது தெரிய வந்ததாம்.
அப்பா பெயரைப் பயன்படுத்தாமல் தன் திறமையால் மட்டுமே வாய்ப்பை பெற வேண்டும் என்று முயற்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறார் இமயா.
‘ஹார்ட்டின்’ படத்தில் சாதனாவாக இவர் நடித்துள்ளார். படம் வெளியானவுடன் சாதனாவை மக்கள் கொண்டாடுவார்கள் என்று இயக்குநர் கிஷோர் குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து தமிழ்ப் பெண் நடிக்க வந்ததால், உங்களின் திரைப்பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் இமயா என்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள்.

