மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு, ரூ.2,000 சிறப்புத் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு, ரூ.2,000 சிறப்புத் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

2 mins read
7c7b0c7c-0b57-4ad6-8815-0d46c3d07284
மு.க. ஸ்டாலின். - படம்: மாலை மலர்

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகைப் பயனாளிகளுக்குக் கோடைச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குரிய உரிமைத்தொகை மொத்தமாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆக மொத்தம், 1.3 கோடிப் பெண்களுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி ரூ.5,000 அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது இந்த எதிர்பாராத அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.

முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக, அடுத்து தாங்கள் ஆட்சியமைத்தால் மகளிர்க்கு வழங்கப்படும் மாதாந்தர உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என்றும் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதையடுத்து, ஆளும் திமுக சார்பாக ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என்று திரு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மகளிர்க்கு திமுக அளித்துள்ள உறுதிமொழிதான் உரிமைத்தொகை என்றும் யார் தடையை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலைக் காரணங்காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத்தொகையை சிலர் முடக்க முயன்றபோதும் திமுக அரசு முந்திக்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வெல்லும் தமிழ்ப் பெண்களின் ஆதரவுடன் திமுக வெற்றிபெறும். அனைத்துச் சகோதரிகளுக்கும் உரிமைத்தொகையானது ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது சாத்தியமில்லை எனச் சில தரப்பினர் கூறினர் என்றும் திமுக அரசாங்கம் நிதி நெருக்கடிகளைச் சமாளித்து, மத்திய அரசின் ஓர வஞ்சனையை மீறி கடந்த ஆண்டுமுதல் அத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்