பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சந்தோஷ்’.
இந்தப் படம் சென்ற ஆண்டு வெளிநாடுகளில் வெளியானது.‘சந்தோஷ்’ படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை இந்தியாவில் வெளியிட அந்நாட்டின் தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) தடை விதித்துள்ளது.
வட இந்தியாவில் நடக்கும் கதையான ‘சந்தோஷ்’, கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் காவல்துறை அதிகாரியிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் நிலவும் இனப் பாகுபாடு உள்ளிட்டவற்றை இப்படம் எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
படத்தில் இடம்பெறும் பல கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை அகற்றுமாறு தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால், அதற்குப் படக்குழு மறுத்துள்ளதால் இந்தியாவில் படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய படத்தில் பெண் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கதாநாயகி ஷஹானா கோஸ்வாமி, “படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.
“எங்கள் முழு குழுவுக்கும் அதில் உடன்பாடில்லை. காரணம், அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள். எனவே, இந்தியத் திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.
“இந்தியாவில் வெளியிட இவ்வளவு தணிக்கைகளும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது,” என்று தெரிவித்தார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஷஹானா கோஸ்வாமி பெற்றிருக்கிறார்.
படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, தணிக்கை வாரியத்தின் முடிவு, ஏமாற்றம் தருவதாகவும் மனமுடையச் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
“இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு. காரணம், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்தியத் திரையுலகுக்குப் புதியவையோ இதற்கு முன்பு வேறு படங்களில் காட்டப்படாதவையோ அல்ல என்பது எனது கருத்து,” என்று கூறினார்.

