தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட ‘கூலி’

2 mins read
633cd75b-7faa-4bcc-8d1d-1a21b89f0b8c
ரஜினி, லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்தப் படத்திற்காக 375 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்தியாவில் இதுவரை அந்த அளவுக்குப் பிரம்மாண்டமாகச் செலவு செய்து எந்தத் திரைப்படமும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூலி படத்தில் நடிக்க ரஜினி 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் ரஜினி 110 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். தற்போது அதைவிடக் கூடுதலாக 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளமும் உயர்ந்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் படம் வெற்றி அடைந்தது.

அப்படத்தில் லோகேஷ் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார். தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ரஜினியின் கூலி படத்தை இயக்க 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ், இவ்வளவு குறுகிய காலத்தில் பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வியப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

கமலுக்கு ஒரு ‘விக்ரம்’ வெற்றிப் படத்தைக் கொடுத்ததைப் போல ரஜினியின் கூலி படத்தையும் பலர் பாராட்டும் படமாக எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் அவர் செதுக்கியுள்ளாராம்.

‘கூலி’ ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீடு காண்கிறது. ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதிஹாசன், அபிராமி என பலர் நடிக்கிறார்கள். இவர்களில் சத்யராஜ் மட்டும்தான் ரஜினிகாந்த்துடன் ஏற்கெனவே நடித்திருக்கிறார். மற்றவர்கள் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளனர்.

இந்திய அளவில் அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த 10 இயக்குநர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜும் இருக்கிறார். அவர் இயக்கிய ‘மாநகரம்’ முதல் ‘விக்ரம்’ வரை அத்தனைப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.

விஜய்யை வைத்து அவர் கடைசியாக இயக்கியிருந்த ‘லியோ’ மட்டும்தான் சுமார் ரகத்தில் சேர்ந்தது.

குறிப்புச் சொற்கள்