‘இந்தியன்-2’ படத்தின் படுதோல்வி, அதன் இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகன் என முத்தரப்பையும் சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது.
மூன்றாம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சங்கர் தயாராக இருந்தாலும், தயாரிப்புத் தரப்பு அத்திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, தயாரிப்புத் தரப்பில் சற்றே இறங்கி வந்தாலும், கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்க விரும்பவில்லை என்று தகவல் பரவும் அளவுக்கு சங்கர் பெயர் ‘ரிப்பேர்’ ஆகிக்கிடக்கிறது.
மூன்றாம் பாகத்தில் நடிக்கவும் தனக்கு சம்பளம் தர வேண்டும் என கமல் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.
மறுபக்கம், சங்கரும் தனக்கு என்னென்ன தேவை என்று ஒரு பட்டியலை நீட்ட, கோடிக்கணக்கில் செலவு வைக்கும் அந்தப் பட்டியலைக் கண்டு தயாரிப்புத்தரப்பு மிரண்டு போனதாகத் தகவல். இத்தனைக்கும் சங்கரின் சம்பளம் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
கூட்டிக்கழித்துப் பார்த்த தயாரிப்பாளர், ‘ஆளை விட்டால் போதும்’ என்று கழண்டுகொள்ள, ‘இந்தியன்’ தாத்தாவைக் காப்பாற்ற ஆபத்பாந்தவனாய் வந்து நின்றார் ரஜினி.
அவர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக, கமலும் சங்கரும் ஊதியம் வாங்காமல் பணியாற்றுவது என்றும் படத்தின் வியாபாரத்துக்குப் பிறகு, லாபம் கிடைத்தால் அதைப் பகிர்ந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன் பிறகும், ஏனோ அடுத்தடுத்த பணிகள் நடக்கவில்லை.
அதன் பின்னர், தாமே முன்வந்து கமலிடமும் தயாரிப்பாளரிடமும் பேசியுள்ளாராம் சங்கர். ‘கமல்ஹாசன் 15 நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும், மொத்தப் படத்தையும் முடித்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தயாரிப்பாளர் தற்போது ஆர்வம் காட்டினாலும், கமல் தரப்பில் இருந்து சாதகமான பதில் ஏதும் இதுவரை வரவில்லை. ஆனால், அதற்குள் கமல்ஹாசன் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கேள்விப்பட்ட சங்கர், மிகவும் வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முத்தரப்பையும் சந்தித்துப் பேசிய ரஜினியோ, கமல்ஹாசன் நிச்சயம் நடிப்பார் என்று கூறி, சங்கரை சமாதானப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, கமல்ஹாசன் அடுத்து, சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்பு, அறிவ்) இயக்கத்தில் நடிக்கும் படப்பிடிப்பு தாமதமாகிறது.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படும் பட வேலைகளைத் தொடங்க குறைந்தபட்சம் ஓராண்டு ஆகக்கூடும்.
இடைப்பட்ட காலத்தில், லோகேஷ் கனகராஜை நாயகனாக வைத்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
“ஆக, கூட்டிக்கழித்துப் பார்த்தால் கமல்ஹாசன் ‘இந்தியன்-3’ படத்துக்கு எப்படியும் கால்ஷீட் ஒதுக்கிவிடுவார்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.