இந்தியத் திரைத்துறையில் சில நிமிடப் பாடல்களுக்காகவும் பிரம்மாண்ட காட்சிகளுக்காகவும் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு வருகின்றனர். திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்பாளர்கள் பெரும் தொகையை வாரி இறைப்பதாகக் கூறப்படுகிறது.
எந்திரன் - ரூ.15 கோடிக்கும் மேல்
இயக்குநர் ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ‘கிளிமாஞ்சாரோ’, ‘அரிமா அரிமா’ பாடல்களுக்கு மட்டும் 15 கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது. பெரு நாட்டின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் ‘கிளிமாஞ்சாரோ’ ஆகும்.
அங்குள்ள பழமையான கற்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதால் கேமராக்களைக் கைகளிலேயே சுமந்துசென்று படமாக்கினர். பழைமைவாய்ந்த அந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது தனித்துவமான சாதனையாகக் கருதப்படுகிறது.
கேம் சேஞ்சர் - ரூ.90 கோடி
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்காகத் தோராயமாக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் ‘ரா மச்சா மச்சா’ பாடலில் மட்டும் இந்தியா முழுவதிலிருந்தும் 1,000 பாரம்பரிய நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
பத்மாவத் - ரூ.12 கோடி
‘பத்மாவத்’ படத்தில் ‘கூமர்’ நடனப் பாடலுக்காக 12 கோடி ரூபாயில் பிரம்மாண்டக் கண்ணாடி அரண்மனை அமைக்கப்பட்டது. அந்த அரண்மனை செட் அமைப்பதற்குத் தொடர்ச்சியாக 40 நாள்கள் ஆயின.
அதில் நடிகை தீபிகா படுகோன் 30 கிலோ எடையுள்ள ஆடை அணிந்து 66 முறை சுழன்று நடனமாடினார். ஒரே ஒரு குறிப்பிட்ட காட்சிக்குக் கோடிகளைச் செலவிட்ட திரைப்படங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
சாஹோ - ரூ.70 கோடி
‘சாஹோ’ படத்தில் அபுதாபியில் படமாக்கப்பட்ட எட்டு நிமிடக் கார் துரத்தும் காட்சிக்கு 70 கோடி ரூபாய் செலவானது. கணினித் தொழில்நுட்பம் ஏதுமின்றி 37 ஆடம்பரக் கார்களும் ஐந்து பிரம்மாண்ட லாரிகளும் நிஜமாகவே இடித்து நொறுக்கப்பட்டன.
ஆர்ஆர்ஆர் - ரூ.45 கோடி
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இடைவேளைக் காட்சிக்காகப் புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் கணினித் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டன. தொடர்ச்சியாக 50 இரவுகள் படமாக்கப்பட்ட அந்த ஒற்றைக் காட்சிக்குக் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
2.0 - ரூ.54 கோடி
அதேபோல ‘2.0’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு 54 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னை விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான கைப்பேசிகள் சேர்ந்து ராட்சதப் பறவையாக மாறும் காட்சி அதுவாகும்.

