அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, ஆண்டு இறுதியில் தமக்குப் பிடித்த திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை சமூக ஊடகத்தில் பட்டியலாக வெளியிடுவார்.
இந்த ஆண்டு (2024) திரைப்பட பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) படம் முதலிடத்தில் இருந்தது.
கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இப்படம் கான் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்றது. மேலும், அது ‘கோல்டன் குளோப்’ விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
82வது ‘கோல்டன் குளோப்’ விருதுகள் விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உருவான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.