தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டம்

2 mins read
9b168bcf-bb87-437f-b2f2-fc6991916831
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மோதாது என அப்படத்தின் தயாரிப்புத் தரப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்
‘ஜனநாயகன்’ விஜய்.
‘ஜனநாயகன்’ விஜய். - படம்: ஊடகம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டிருக்கும் படம் ‘ஜனநாயகன்’.

அப்படம் விஜய் நடிக்கும் கடைசி படம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படத்தின் விளம்பரப் பணிகளை இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திலிருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவைச் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதற்காக நேரு உள்விளையாட்டரங்கம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழகத்தின் ஆளுங்கட்சி இந்த விவகாரத்தில் பிரச்சினை செய்ய வாய்ப்பு இருப்பதாகப் படக்குழு கருதுகிறது.

அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற அதே இடத்தை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவிற்குப் படக்குழு தேர்வு செய்துள்ளது என்றும் விரைவில் அதற்கான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டு வருவதாகவும், இதற்காகவே பல கோடிகளைச் செலவழிக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மோதாது என அப்படத்தின் தயாரிப்புத் தரப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

பொங்கல் தினத்தன்று ‘பராசக்தி’ படம் கட்டாயம் வெளியீடு காணும் என்றும் அது கூறியுள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இதனால், ஜனவரி 9 முதல் 13 வரை ‘ஜனநாயகன்’ படம் வசூலைக் குவித்துவிடும் என்றும் அதற்கு பிறகுதான் ‘பராசக்தி’ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ ஆகிய இரண்டும் பொங்கல் படங்கள்தான் என்றாலும் ஒரே நாளில் வெளியாகப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்