‘வீர தீர சூரன் 2’ படத்திற்கு நான்கு வார இடைக்காலத் தடை

2 mins read
b51ec675-a9f5-4f85-bc0c-c183eeb3846e
‘வீர தீர சூரன் 2’ படத்தில் விக்ரம். - காணொளிப் படம்: திங்க் மியூசிக் இந்தியா / யூடியூப்

‘சியான்’ விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தை ‘சித்தா’ படத்தின் இயக்குநரான எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ல் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற ‘கேங்ஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பொதுவாகத் திரையுலகில் ஒரு படத்தின் பாகம் வெளியான பிறகே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இயக்குநர் அருண்குமார் முதலில் 2ஆம் பாகத்தை இயக்கி வெளியிடுகிறார்.

அருண்குமாரின் இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

‘வீர தீர சூரன் 2’ இப்படம் வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படம் வெளியாவதில் சிக்கல் இப்போது ஏற்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கு நான்கு வார இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீர தீர சூரன் 2’க்கு மும்பையைச் சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் பண முதலீடு செய்திருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு இப்படத்தின் மின்னிலக்க உரிமையை தயாரிப்பாளர் எழுதி கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தத்தில் உள்ளபடி படத்தின் ஓடிடி (OTT) உரிமை இன்னமும் விற்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குள் படம் வெளியாகத் தயாராகிவிட்டது.

படம் வெளிவரும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதை ஓடிடி தளத்துக்கு விற்க முடியவில்லை. அதனால் B4U நிறுவனம், முதலீடு செய்த தொகையில் 50 விழுக்காடு இழப்பீடு வழங்கவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணைக்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றம் ‘வீர தீர சூரன் 2’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10.30 மணிவரை படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையுலகம்