இந்தியாவின் முன்னணி நடிகையாக ராஷ்மிகாவுக்கு புது அங்கீகாரம்

இந்தியாவின் முன்னணி நடிகையாக ராஷ்மிகாவுக்கு புது அங்கீகாரம்

2 mins read
0b73a8ef-3def-4b7b-a3ee-20773097b5cc
ராஷ்மிகா மந்தனா. - படம்: பின்டர்ரஸ்ட்
Google News Preferred Icon

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகும் படங்களே பெரியளவில் கவனம் ஈர்க்கின்றன.

அந்தவகையில் இந்த ஐந்து மொழிகளிலும் பிரபலமாகி வரும் நடிகைகள், அதாவது ‘பான் இந்தியா’ அளவில் ஜொலிக்கும் நடிகைகளில் முதல் ஐவரின் பெயர்ப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில், கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது பான்-இந்தியா அளவில் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.

‘புஷ்பா’, ‘அனிமல்’, ‘சாவா’ போன்ற திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இவரது பான்-இந்தியச் சந்தை மேலும் வலுவடைந்துள்ளது.

அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான பிரபலமான நடிகைகளின் தரவரிசைப் பட்டியலில், தீபிகா படுகோன், ஆலியா பட், ஷ்ரத்தா கபூர், சாய் பல்லவி போன்ற முன்னணி நட்சத்திரங்களைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்மிகா மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய் பல்லவி-ராஷ்மிகா மந்தனா-ஷ்ரத்தா கபூர்.
சாய் பல்லவி-ராஷ்மிகா மந்தனா-ஷ்ரத்தா கபூர். - படம்: சினியுலகம்

இருப்பினும், இத்தரவரிசையின் அதிகாரபூர்வ அளவுகோல்கள் தெளிவாக உறுதி செய்யப்படவில்லை.

எனவே, இதனை ஒரு குறிப்பிட்ட ஊடகத்தின் கணிப்பாகவே பார்க்க வேண்டும் என்றும் இந்தியத் திரையுலகின் ‘நம்பர் 1 நடிகை’ என பெயர் சூட்டிக் கொள்ள முடியாது என்றும் திரையுலகினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

உதாரணமாக, ‘Ormax’ வெளியிட்ட தரவரிசையில் சமந்தா முதலிடத்திலும் ஆலியா பட் இரண்டாமிடத்திலும் ராஷ்மிகா மூன்றாமிடத்திலும் இருந்தனர்.

ராஷ்மிகாவின் இந்த வளர்ச்சிக்கு அவரது கதைத் தேர்வுகளும் சமூக ஊடகங்களில் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது இவர் ‘மைசா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் அவர் நடிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து, மீண்டும் தமது பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்பட வசூல், சமூக ஊடக ஈடுபாடு, விளம்பர ஒப்பந்தங்கள் எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ராஷ்மிகா தொடர்ந்து வலுவான நிலையில் இருந்து வருகிறார்.

‘காக்டெயில்-2’ படத்துக்குப் பிறகு ராஷ்மிகாவுக்கு மேலும் புகழ் கூடியிருப்பதால் அவர் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் 2ஆம் இடத்தில் இருந்தார்.

இந்தி மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் மிக வேகமாக முன்னேறி வரும் ராஷ்மிகா மந்தனாவின் இந்தப் புதிய அங்கீகாரம், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2ஆம் இடத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார். கர்ப்ப காலத்தில் படங்களில் நடிக்காமல் இருந்ததால் அவர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஷ்ரத்தா கபூர், சாய் பல்லவி, ஆலியா பட் ஆகியோர் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களில் தொடருகிறார்கள்.

பான் இந்தியா அளவில் ஜொலிக்கும் நடிகைகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படத்துறைவெற்றிராஷ்மிகாசமூக ஊடகம்