தானும் ரஜினியும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று முன்பு விரும்பி முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
“முன்பு, ஒரு பிஸ்கட்டைப் பாதி பாதியாக எங்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்தனர். அதனால் ஆளுக்கொரு பிஸ்கட் சாப்பிட ஆசைப்பட்டுப் பிரிந்தோம்.
“அதன் பிறகு நன்றாகச் சாப்பிட்டோம். இப்போது மீண்டும் அரை பிஸ்கட் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளோம். எனவே, நிச்சயமாக இருவரும் இணைவோம்.
“எங்களுக்குள் போட்டி இல்லை. அது ரசிகர்களாக ஏற்படுத்தியது. இருவரும் அப்படியேதான் இருக்கிறோம். நாங்கள் இருவரும் வியாபார ரீதியாக இணைவது புதிதாக, வியப்பாக இருக்கலாம். ஆனால், எப்போதோ நடக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே என்ற மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்,” என்றார் கமல்ஹாசன்.
இதற்கு, ‘இருவரும் இணையும் படத்தை இயக்கப்போவது யார்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அநேகமாக, லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கக்கூடும் எனத் தகவல்.
கமலும் ரஜினியும் இதற்கு முன்பு 13 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.