சமூக ஊடகங்களில் இருந்து தமிழ்த் திரையுலகுக்கு வந்த பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நிகாரிகா.
ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான், மகேஷ் பாபு, அமீர் கான் போன்ற பிரபலங்கள், ‘யூடியூப் ரீல்ஸ்’ காணொளியில், 30 நொடிகள் தோன்ற, நேரம் கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் நிகாரிகா.
‘கூகல்’ நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவுடன் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவருக்கு இந்த லட்சியம் நிறைவேறக்கூடிய தருணமும் வந்தது.
ஆனால், மின்னிலக்க உலகம் தனக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடும் என உறுதியாக நம்பிய நிகாரிகா, அந்த வேலையை ஏற்காமல் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினாராம்.
இன்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு தாம் வளர்ச்சி கண்டுள்ளதாகச் சொல்லி பூரித்துப்போகிறார் நிகாரிகா.
“எங்களுக்குப் பூர்வீகம் ஆந்திரா. ஆனால், நான் படித்து வந்ததெல்லாம் பெங்களூரில்தான்.
“பொறியியல் பட்டப்படிப்பு முடிந்ததும், எம்பிஏ பட்ட மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். அங்கு இருந்தபோதுதான் கொரோனா முடக்கநிலை காரணமாக உலகம் அவதிப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சொந்த ஊரில் நம் வீட்டில் அடைபட்டுக் கிடந்தால்கூட பரவாயில்லை. கடல் கடந்து, ஏதோ ஒரு நாட்டில் ஓர் அறையில் பல மாதங்கள் அடைந்துகிடந்தது கொடுமை. அந்தச் சமயத்தில்தான் பொழுதுபோக்குக்காக யூடியூப் வலையொளியில் கவனம் செலுத்தினேன்.
“என் நண்பர்கள் கூட அடிக்கடி, ‘உன்னிடம் நிறைய சக்தியும் திறமையும் உள்ளன. நீ ஏன் யூடியூப் தளத்தில் கவனம் செலுத்தக்கூடாது,’ எனக் கேட்டதுண்டு.
“அவர்கள் கேட்டது எவ்வளவு சரியானது என்பது போகப்போகப் புரிந்தது. கூகல் பணிக்காக நேர்முகத் தேர்வுக்குக் கடுமையாக மெனக்கெட்டேன். அந்த வேலைதான் என் வாழ்க்கையின் ஆகப்பெரிய கனவாக இருந்தது.
“ஆனால், வேலை கிடைத்தும்கூட மின்னிலக்க உலகம் எனக்காக வேறொரு திட்டத்தை வைத்திருக்கிறது என்பதை என் மனம் புரிந்துகொண்டது. துணிந்து களமிறங்கினேன். வெற்றி கிடைத்தது,” என்கிறார் நிகாரிகா.
இணையத்தில் ஓரளவு புகழ் பெற்றதுமே சில சினிமா வாய்ப்புகள் தேடி வந்தனவாம். ஆனால், படிப்பை முடிக்கும் வரை எதுவும் வேண்டாம் என்று ஓய்வெடுத்து, அதில் உறுதியாக இருந்துள்ளார்.
அண்மையில் வெளியான ‘பெருசு’ படத்தில் இவர்தான் கதாநாயகி. அதுமட்டுமல்ல, இப்படத்தைத் தயாரித்த கார்த்திக் சுப்பராஜின் ‘பெஞ்ச் ஸ்டோன்’ நிறுவனம் இவரை ஒரு சமயத்தில் மொத்தமாக மூன்று படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
அந்த அளவுக்கு அந்த நிறுவனம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
“இதையடுத்து, டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதயம் முரளி படத்திலும் நடித்துள்ளேன். மேலும், மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது,” என்று சொல்லும் நிகாரிகா, கடந்த மூன்று ஆண்டுகளாக ‘கான்’ திரைப்பட விழாவில் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வருகிறார்.
மேலும், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளியேறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
“நடப்பதை எல்லாம் பார்க்கும்போது கனவு போல் இருக்கிறது. எல்லாமே தானாகத் தேடி வந்த வாய்ப்புகள்.
“கான் திரைப்பட விழாவில் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது, மறக்க முடியாத அனுபவங்கள் கிடைக்கின்றன. அதற்கான ஆடை, ஒப்பனை, அனைத்துலக திரை நட்சத்திரங்கள் இடையே நான் இருப்பது ஆகியவை எல்லாம் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத நிகழ்வுகள்.
“அந்த வகையில் நான் பெரும் அதிர்ஷ்டசாலி,” என்கிறார் நிகாரிகா.

