தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெரிந்ததை உருப்படியாகச் செய்தால் போதும்: அருள்நிதி

4 mins read
94aab3c5-6223-4a9a-8cb8-82d78bee4841
நடிகர் அருள்நிதி. - படம்: ஊடகம்

எனக்கு ஓரளவுக்கு நடிக்க வரும் என்பதால், தெரிந்ததை உருப்படியாகச் செய்தால் போதுமென நினைக்கிறேன் என்று சொல்கிறார் நடிகர் அருள்நிதி.

வேறு கூடுதலான திறமையை எல்லாம் காட்டி தேவையில்லாமல் எதற்கு சொதப்பவேண்டும் என்றும் அவர் எதார்த்தனமாகக் கேட்கிறார்.

பொதுவாக தெரியாத பேயைவிட தெரிந்த பேய் நல்லது என்று சொல்வார்கள். அதேபோலத்தான் தெரியாத வேலையில் அவதிப்படுவதைவிட தெரிந்த வேலையில் ஈடுபடுவதே உகந்தது என தான் நினைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

‘டிமான்டி காலனி’ படத்தைப் பொருத்தவரை தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூறும் அருள்நிதி, தமிழக ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணலில் மனம்திறந்து பேசியுள்ளார்.

எல்லா கதைகளையுமே நாம் இரண்டாம் பாகமாக எடுக்கமுடியாது. முந்தைய பாகத்தில் அதற்கான வெற்றியும் படத்தை எடுப்பதற்கான காரணமும் இருந்தால்தான் அடுத்த பாகம் எடுப்பது என்பது சாத்தியமாகும். அதனால்தான் ‘டிமான்டி காலனி 2’ படம் எடுப்பதற்கு சாத்தியமானது என்கிறார் அவர்.

என்னைத் தேடி நிறைய கதைகள் புது இயக்குநர்களிடம் இருந்து வருகின்றன. அறிமுக இயக்குநர்களிடம் பொதுவாகவே வெற்றிபெறவேண்டும் என்ற அடங்காத ஒரு வெறி இருக்கும். அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அத்துடன், மற்றொருவர் வெற்றியில் நமது பங்கும் இருக்கும்பொழுது இன்னும் திருப்தியாகத் தானே இருக்கும்? என்றும் அவர் கேள்வி கேட்கிறார்.

முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் ஓடினால்தான் வெற்றிபெறும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அதுபோன்ற நிலையில்லை. திரையரங்குக்கு நிகராக ஓடிடி தளங்கள் வாய்ப்பைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

அதனால் தீர யோசித்து நல்ல கதையைத் தேர்வு செய்து நடித்தாலே பாதி அளவுக்கு நாம் நடிக்கும் படங்கள் வெற்றிபெற்றதுபோலத்தான் என்பது என் நம்பிக்கை. அந்த நோக்கத்தில்தான் நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்துவருகிறேன் என்று சொல்பவர், தாத்தா (கலைஞர் கருணாநிதி) இல்லாமல் அவ்வப்போது மனமுடைந்து போவதாகவும் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தாத்தா இல்லாத இடம் பெரும் வெற்றிடமாக உள்ளது. இப்பவும் எந்தப் படம் வெளியீடு ஆனாலும் சரி, அதற்கு முன்பு தாத்தாவின் நினைவிடத்தில் போய் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுதான் எதையும் ஆரம்பிப்பேன்.

என்னை விட என் மகன் மிகவும் அவரை ‘மிஸ்’ பண்ணுகிறான். அவர் தனது ஓய்வுக்குப் பிறகு அதிகமாக நேரம் செலவழித்தது எனது மகன் கூடத்தான். இருவரும் உட்கார்ந்து ஏதாவது பழைய கிரிக்கெட் காணொளிகள், விதவிதமான கதைகள் இப்படி பேசிக்கொண்டே இருப்பார்கள்.

எனது சிறிய வயதில் பள்ளிக்குப் போகும்போது கூட தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிட்டுத்தான் போவேன். இப்போது அவர் இல்லாமல் கஷ்டமாகத்தான் உள்ளது.

என்னுடைய படங்களில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என திட்டம் வைத்துள்ளேன்.

அடுத்து ‘டைரி’ படம் முடியும்பொழுது பாகம் 2 எடுப்பதற்கான தொடர்ச்சியான கதைக்கருவை வைத்துத்தான் படத்தை முடித்திருப்பார் இயக்குநர் இன்னாசி என்று கூறும் அருள்நிதி, இயக்குநராவதை கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார்.

எதற்கு நமக்கு தெரியாத வேலைகளில் எல்லாம் ஈடுபட்டுக்கொண்டு இருக்கவேண்டும்? அது பெரிய பொறுப்பு. நிறைய அனுபவம் வேண்டும். அப்படியெல்லாம் நான் என்னை யோசித்துக்கூட பார்த்தது இல்லை. நடிப்பதை உருப்படியாகச் செய்தால் போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் அருள்நிதி.

‘தகராறு’ பட இயக்குநர் கணேஷுடன் அடுத்து ஒரு படம் செய்துள்ளேன். அதில் ஆரவ்வும் நடித்துள்ளார். அந்தப் படத்தில் நான் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளேன். படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டார்கள். இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளனர்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ‘பம்பர்’ பட இயக்குநர் செல்வகுமாருடன் மற்றொரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

14 ஆண்டுகளாக திரையுலகப் பயணம், பெரிய குடும்பப் பின்னணி இருந்தும் ஏன் முன்னணி நாயகிகள், இன்னும் பெரிய பட்ஜெட் படங்களில் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்கு, முதல் படம் நடிக்கும்போது என்னைச் சுற்றி இருந்த அத்தனை பேரும் ‘இதெல்லாம் உனக்கு ஒத்துவருமா?’ என்று முதலில் பயத்தைத்தான் காண்பித்தார்கள்.

ஏனெனில், எனக்கு பொறுமையே கிடையாது. ஆனால், சினிமாதான் அந்தப் பொறுமையை சொல்லிக் கொடுத்தது.

நாம் நடிக்கவேண்டும், சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உள்ளே வந்தவன்.

கதைக்கு யார், என்ன தேவை என்பது இயக்குநரின் விருப்பம். அதில் நாம் தலையிட்டால் வேலைக்கு ஆகாது. நான் தேர்வு செய்யும் கதை எல்லாமே பேய், பிசாசு, கொலை, விசாரணை இப்படித்தான் வந்துகொண்டுள்ளது.

இதில் பெரும்பாலும் நாயகிக்கு அதிகம் வேலையே இருக்காது. இதில் போய் தலையிட்டு நான் என்ன செய்வது என்று கேட்கும் அருள்நிதி, இதுபோன்ற கதைகளில் நடிப்பதற்குத் தான் எனக்கும் பிடித்துள்ளது என்கிறார்.

குறிப்புச் சொற்கள்