தனது ரசிகர்கள் தீப்பந்தம்போல் செயல்படும் வரை, தமது திரைப்பயணம் எந்தப் பிரச்சினையும் இன்றி முன்னோக்கிச் செல்லும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கட்கிழமை சிறப்பாக நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது பயணத்தில் ரசிகர்கள்தான் வழித்துணை என்றும் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு நடிகை நயன்தாராவுக்கான மறைமுக பதில் எனக் கருதப்படுகிறது.
“என்னைப் பற்றி எவ்வளவு வதந்திகளை வேண்டுமானாலும் பரப்புங்கள். ஒவ்வொரு முறையும் எனது படம் வெளியாகும் போதெல்லாம், ஒன்றரை மாதங்களுக்கு முன்பே எதிர்மறைக் கருத்துகளை சிலர் பரப்புகிறீர்கள்.
“என் ரசிகர்களின் துணை இருக்கும் வரை எனது பயணம் தடைபடாது. எனவே, என் தம்பிகளே... சற்று தள்ளிப்போய் விளையாடுங்கள். உங்களுடைய கோமாளித்தனம் இங்கு வேண்டாம்.
“நான்கைந்து வதந்திகளைப் பரப்பி என்னை அழித்துவிட நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.
“எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை,” என்று பலத்த கைதட்டலுக்கு மத்தியில் பேசினார் தனுஷ்.
தனது திருமணத்தையொட்டி, முன்னணி ஓடிடி தளத்துக்காக ஓர் ஆவணப் படத்தைத் தயாரித்திருந்தார் நயன்தாரா.
தொடர்புடைய செய்திகள்
தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய, ‘நானும் ரெளடி தான்’ படப் பாடல்களை அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள நயன்தாரா அனுமதி கோரினார். ஆனால், தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்காததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எனினும், பாடல்களை அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தியதால் மோதல் பெரிதானது. தனுஷ் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையடுத்து, தனுஷ் குறித்து சரமாரியாக குற்றஞ்சாட்டி பேட்டியளித்திருந்தார் நயன்தாரா.
அப்போது, எந்த பதிலும் அளிக்காத தனுஷ், தற்போது ‘குபேரா’ பட விழாவில் பதிலடி கொடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.