ஒரு புத்தகத்தைப் படித்தது போன்ற ஓர் உணர்வைத் தந்தது: லட்சுமி பிரியா

2 mins read
6ac3809a-c4dc-453a-aec1-e0f5242cfe5c
லட்சுமி பிரியா சந்திரமௌலி. - படம்: ஊடகம்

லட்சுமி பிரியா சந்திரமௌலி நடிக்கும் இணையத்தொடர் ‘குற்றம் புரிந்தவன்’. இதில் விதார்த் நாயகனாக நடிக்க, நடிகர் பசுபதி முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றவர் லட்சுமி பிரியா. 41 வயதான இவர், நல்ல கதையம்சம் உள்ள, சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

‘இரு படங்களுக்கு இடையே ஏன் எப்போதுமே அதிக இடைவெளி ஏற்படுகிறது?’ எனக் கேட்டால், ‘என்னிடம் பெரும்பாலானோர் மறக்காமல் கேட்கும் கேள்வி இதுதான். இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை’ என்கிறார்.

“‘குற்றம் புரிந்தவன்’ தொடரில் தன் மகளைச் சுற்றி வரும் ஒரு கதாபாத்திரமாக, துக்கப்படும் தாயாக, ஒரு கதாபாத்திரத்தின் முழு அடையாளத்தையும் உள்ளடக்கிய ஒரு மர்மமான பெண்ணாக வாழ முயற்சி செய்துள்ளேன்.

“ஒருவேளை இந்தப் படத்தைப் பார்க்கும்போது திரையுலகில் எனது தேடலின் தீவிரம் குறித்து உங்களுக்கு ஏதாவது புரியக்கூடும். உங்கள் கேள்விக்கு இதுதான் பதில்,” என்கிறார் லட்சுமி பிரியா.

இவரும் விதார்த்தும் ஏற்கெனவே ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்புதிய இணையத்தொடரில் கூச்ச சுபாவம் உள்ள காவலராக நடித்துள்ளாராம் விதார்த். இவரைவிட பசுபதிக்குத்தான் அதிக காட்சிகளும் முக்கியத்துவமும் உள்ளனவாம். ஆனால் விதார்த், இது குறித்தெல்லாம் தாம் கவலைப்படவில்லை என்கிறார்.

பசுபதியும் இவரும், ’கூத்துப்பட்டறை’ மாணவர்கள். ஒரே இடத்தில் நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

“நான் யாரிடமும் ஈகோ பார்ப்பதில்லை. ஒரு நடிகராக நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பது கவர்ச்சியான அம்சம் அல்லவா என்று கேட்கிறார்கள். நான் பல வாழ்க்கை வாழ முடியும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைக்குத் திட்டமிட முடியும். அப்படித்தான் நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு புதிய வாழ்க்கை வாழ என்னை அனுமதிக்கிறது.

“ஒரே மாதிரியான வாழ்க்கையை மட்டும் வாழ்வதற்கு ஏற்ப என்னை நானே ஏன் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கேட்கிறார் விதார்த்.

இந்த ‘குற்றம்புரிந்தவன்’ தொடரின் இயக்குநர் செல்வமணியை தனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும் என்கிறார் லட்சுமி பிரியா. தொடரின் ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

“இத்தொடரில் நடிப்பது மறக்க முடியாத ஒரு புத்தகத்தைப் படித்தது போன்ற ஓர் உணர்வைத் தந்தது. அதில் போதுமான திருப்பங்கள் இருந்தன. எனது கதாபாத்திரத்தை மனச்சோர்வுடன் இருப்பதாகச் சித்திரித்திருந்தனர். அவற்றை நான் வித்தியாசமாக வெளிப்படுத்த முடியும் என்று இயக்குநரிடம் கூற வேண்டியிருந்தது.

“அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை மீறி நான் இந்தத் தொடரில் நடிக்க விரும்பினேன். ஏனெனில் இதில் நடிப்பது அத்தகைய அலாதியான அனுபவத்தைத் தரும் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்,” என்கிறார் லட்சுமி பிரியா.

‘இறுகப்பற்று’, ‘அஞ்சாமை’,சிவரஞ்னியும் சில பெண்களும்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் இருப்பதை உறுதி செய்து வருகிறார் இவர்.

குறிப்புச் சொற்கள்