‘புஷ்பா 2’ திரைப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்தது குறித்து அல்லு அர்ஜூன் பேசியபோது இனி இந்தி படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி தெலுங்கு மட்டுமின்றி பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது.
இதனிடையே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் அதிக வசூல் செய்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தத் திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஸ்ரேயஸ் தால்பேட் குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜூன், “இனி இந்திப் படங்களில் நடிக்கவே கூடாது என முடிவு செய்துள்ளேன். இந்திப் படங்களில் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. என் வாழ்நாளில் ஒன்றிரண்டு இந்தி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.
தமிழ் பதிப்பை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியிடுகிறது. எனவே, வேறு தமிழ்ப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

