தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாரியின் கதாபாத்திரமாக மாறுவது எளிதன்று: நிகிலா

2 mins read
d92d1a05-d5f5-4a0f-b6e4-e780a56911e0
நிகிலா விமல். - படம்: ஊடகம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் விமர்சகர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அப்படத்தின் நாயகி நிகிலா விமலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நிகிலா நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘குருவாயூர் அம்பலநடை’ படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், இயக்குநர் மாரி செல்வராஜ் உருவாக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வாழை’ திரைப்படம் தனது திரையுலகப் பயணத்தின் முக்கிய மைல்கல் என்றும் அந்தப் படத்துக்காக தாம் பணியாற்றிய நாள்களை மறக்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் கடந்து வந்த ஒரு கதாபாத்திரத்தில்தான் என்னை நடிக்க வைத்திருந்தார். எனவே நான் நினைத்த மாதிரி எல்லாம் இந்த கதாபாத்திரத்தை மாற்றிவிட இயலாது என்பதை தொடக்கத்திலேயே உணர்ந்திருந்தேன்.

“அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கதாபாத்திரத்தை நான் திரையில் பிரதிபலித்தாக வேண்டும். இயக்குநர் தன் மனதில் என்ன நினைக்கிறாரோ, அது எனது நடிப்பில் வெளிப்படும் வரை கவனம் செலுத்த வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும்.

“அந்த வகையில் இந்தப் படமும் எனது கதாபாத்திரமும் மிக சவாலானதாக அமைந்தன. பொதுவாக, நடிகர்கள் நான்கைந்து முக பாவங்களைத் தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் மாரி செல்வராஜ் அவற்றையெல்லாம் நிராகரித்துவிடுவார்.

“இப்படத்தை இயக்குவதற்காகத்தான் நான் திரையுலகுக்கு வந்தேன் என அவர் அடிக்கடிச் சொல்வார். அப்படியானால் ‘வாழை’ படத்துக்கு அவர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் இடம்பெற்றதில் மகிழ்ச்சி,” என்கிறார் நிகிலா விமல்.

’வாழை’ படத்தை பார்த்த பிறகு இயக்குநர் மிஷ்கின் தொடர்புகொண்டு பேசினாராம். அப்போது நிகிலா அருமையாக நடிப்பதாகவும் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் வாழ்த்தினாராம்.

மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், ராஜ்முருகன் எனக் குறிப்பிட்ட இயக்குநர்களின் படங்களில் நடிக்க தாம் விரும்புவதாகச் சொல்கிறார் நிகிலா.

“திடீரென ‘வாழை’ பட வாய்ப்பு தேடி வந்தது. படப்பிடிப்புக்கு போதுமான நாள்களை ஒதுக்க முடியுமா எனத் தொடக்கத்தில் தயங்கினேன். ஆனால் அந்த தயக்கம் விலகி, இப்படத்தில் நடித்தது என் வளர்ச்சிக்கு இந்த அளவு உதவும் என எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் நிகிலா.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார் நிகிலா. அண்மையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார். ஆனால் இது குறித்து விசாரித்தால் தன்னடக்கத்துடன் அடக்கி வாசிக்கிறார்.

“நான் அங்கு நேரில்கூட செல்லவில்லை. வேறொரு பகுதியில் நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் ஒரு முகாமுக்குச் சென்றிருந்தேன்.

“அப்போது நண்பர்கள் சிலர் அங்கு இருந்தனர். அவர்களுடன் இணைந்து சின்னச்சின்ன வேலைகளைச் செய்தேனே தவிர பெரிதாக ஏதும் செய்யவில்லை. ஆனால் சில ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்திவிட்டன,” என்கிறார் நிகிலா.

எனினும் சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்