மண்சார்ந்த திரைப்படங்களுக்குத் தமிழகத்தில் உரிய ஆதரவு கிடைப்பதில்லை என்ற தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘மாநாடு’ உள்ளிட்ட பல நல்ல படங்களைத் தயாரித்தவர் இவர்.
தற்போது இயக்குநர் கிட்டு இயக்கத்தில், நடிகர் கருணாஸ் தயாரித்து, நடித்துள்ள ‘சல்லியர்கள்’ என்ற திரைப்படத்தை இவர்தான் வெளியிடுகிறார். இதற்குத்தான் படாதபாடுபட வேண்டியிருந்ததாம்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் காமாட்சி, கடைசி வரை ‘சல்லியர்கள்’ படத்தை வெளியிட வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதாகவும் அதனால் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“இன்று குறைந்த செலவில் உருவாகும் சிறிய படங்களுக்குத் திரைகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் இடம் கொடுப்பதில்லை என்பதே உண்மை.
“ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி, எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்குத் திரையரங்கமே கொடுப்பதில்லை. பிறகு நாங்கள் எப்படித்தான் வியாபாரம் செய்வது?,” என்று கேள்வி எழுப்புகிறார் சுரேஷ் காமாட்சி.
ஒரு திரைப்படம் ஓடுமா, இல்லையா என்பதை வாய்ப்பு கொடுத்த பிறகுதான் முடிவு செய்ய வேண்டும். ஒரு படத்தைத் திரையிட விருப்பம் இல்லை என்றால் திரையரங்குகளை வாடகைக்குக் கொடுக்க வேண்டும் என்று புது யோசனையை முன்வைக்கிறார் சுரேஷ் காமாட்சி.
திரையரங்க உரிமையாளர்களில் சிலர் சிறிய திரைப்படங்கள் திரையிடுவதை கௌரவ குறைச்சலாகக் கருதுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டவில்லை என்பதுதான் உண்மை.
வேறு மாநிலங்களில் மண்சார்ந்த ஒரு படத்தை இப்படி புறக்கணித்தால் என்னாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் என்றார் சுரேஷ் காமாட்சி.


