ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் உறவுப்பெண்ணான பவானி ஸ்ரீ, ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ள ‘விடுதலை 2’ படத்திலும் பவானி ஸ்ரீயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் முதல் பாகம் எப்படி ஆர்வத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் இரண்டாம் பாகமும் பலமடங்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்கிறார் பவானி ஸ்ரீ.
“முதல் பாகத்திலேயே என்னுடைய கதாபாத்திரத்துக்கு நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. அவற்றுள் பயன்படுத்தாத காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம்பெற உள்ளன. அவை போக, தற்போது மேலும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
“படத்தை திரையரங்கில் பார்க்கும் போதுதான் நான் எத்தனை காட்சிகளில் வருகிறேன் என்பது தெரிய வந்தது. ஆனால் பின்னணிக் குரல்பதிவின்போது நான் நடித்த அனைத்து காட்சிகளுக்கும் வசனங்களை பேசியிருந்தேன்,” என்று சொல்லும் பவானி ஸ்ரீ, இயக்குநர் வெற்றிமாறன் ஒரு காட்சியை எவ்வாறு படமாக்குவார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்கிறார்.
“அவரது படத்தில் நடிக்க காலி காகிதமாகச் சென்றால் போதும். அவர் சொல்லும் அம்சங்களை கவனமாகக் கேட்டு உள்வாங்கி வெளிப்படுத்தினாலே போதும். நிச்சயம் நற்பெயர் கிடைக்கும்.
“ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எந்த கோணத்தில் கேமராவை வைக்கப் போகிறார், என்ன வசனங்களைப் பேசச் சொல்வார் என்பது யாருக்கும் தெரியாது. காட்சி படமாக்கப்படும் போதுதான் வசனங்கள் வந்து சேரும்.
தொடர்புடைய செய்திகள்
“அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காட்சியைப் பற்றி இயக்குநரே விரிவாகச் சொல்வார். எனவே முன் ஆயத்தம் என்பதெல்லாம் வெற்றி மாறன் படத்துக்கு ஒத்துவராது. ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று அந்தந்த சமயங்களில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி நடிக்க வேண்டியிருக்கும்.
“இதை சவாலான அணுகுமுறை எனலாம். முந்தைய காட்சியில் யாரெல்லாம் எப்படி நடித்தார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து நடித்தால் மட்டுமே நம் நடிப்பு எடுபடும்.
“இப்படி வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்,” என்று பாராட்டும் பவானி ஸ்ரீ, தான் இதுவரை பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரும் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் என்கிறார்.
ஒவ்வொருவரின் பாணியும் வித்தியாசமாக இருக்கும் என்றும் முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
“நடிக்க வந்த தொடக்கத்திலேயே அப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். அனுபவ இயக்குநர்களுடன் பணியாற்றியதை என்றுமே அழுத்தமாக உணர்ந்ததில்லை.
“எது சரி, எது பிடித்திருக்கிறது என்பதில் தெளிவாக இருந்தேன். என் விருப்பத்துக்கு ஏற்ற படங்களில் மட்டுமே நடிக்கிறேன்,” என்று அனுபவசாலியைப்போல் பேசும் பவானி ஸ்ரீ, ‘விடுதலை’ படத்துக்குப் பிறகு கிராமத்துக் கதைகள்தான் தம்மைத் தேடி வருவதாகவும் சொல்கிறார்.
எனினும் அவ்வப்போது வித்தியாசமான கதைகளையும், சிலர் சொல்கிறார்கள் என்றும் அக்கதைகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளன என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“பல இயக்குநர்கள் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். அதிலும் என்னை நானே இதுவரைப் பார்க்காத கோணத்தில் திரையில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள். இது மகிழ்ச்சி தருகிறது.
“மேலும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் தீவிரப்படுத்துகிறது,” என்று சொல்லும் பவானி ஸ்ரீ, ‘புத்தம் புது காலை’ படத்தில் மிக அருமையாக பாடி இருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள்.
ஆனால், வாய்ப்பாட்டு குறித்து தமக்கு அடிப்படை மட்டுமே தெரியும் என்றும் தாம் பாடகியல்ல என்றும் சொல்கிறார். எனினும் வருங்காலத்தில் இசையைக் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் மனதில் வளர்ந்து கொண்டே போகிறதாம்.
தமிழில் அடுத்து ‘காளிதாஸ் 2’ படத்தில் நடிக்கிறாராம்.
“நடிகையான பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. அதே குடும்பம், அதே நண்பர்கள் என்று வாழ்க்கை நகர்ந்தாலும், நான் சிந்திக்கும் கோணம் சற்றே மாறுபட்டுள்ளதாக உணர்கிறேன்.
“நடிகை என்ற அடையாளம் கூடுதல் பலம் தந்துள்ளது. முன்பு இல்லாத துணிச்சல்மிக்க பெண்ணாக பவானி ஸ்ரீ மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் துணிச்சலும் மனதில் அதிகரித்துள்ளது,” என்கிறார் இளம் நாயகி பவானி ஸ்ரீ.

