‘அமரன்’ திரைப்படம் 100 நாள்களைக் கடந்து சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிடி தளத்திலும் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இப்படக்குழுவினர் சென்னையில் வெற்றி விழாவைச் சிறப்பாக நடத்தினர்.
தயாரிப்பாளர் கமல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி சாய் பல்லவி ஆகியோர் இணைந்து படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நினைவுப்பரிசை வழங்கினர்.
இதையடுத்து பேசிய சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் நடித்ததற்கான ஊதியம் சரியாக வந்து சேர்ந்ததாகவும் குறிப்பாக, சீக்கிரமாகவே தன் கைக்கு வந்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும் இதற்காக நன்றி தெரிவித்தார்.
“திரையுலகில் இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பதெல்லாம் மிக அரிது. என்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாவதற்கு முன்பு படத்துக்காக கடன் கொடுக்கும் யாரேனும் ஒரு பைனான்ஃசியர் அலுவலகத்தில்தான் இருப்பேன். அங்குதான் பண விவகாரங்கள் இறுதியாகப் பேசி முடிக்கப்படும்.
“நீங்கள் வாங்கிய சம்பளத்தை பறித்துக்கொண்டு போகும் குழுவும் இங்கு உள்ளது,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் சிவகார்த்திகேயன்.
கமல்ஹாசனுக்கு திரையுலகம் குறித்து தெரியாத விவரங்கள் இருக்க முடியாது என்றும் அவர் இதுபோல் பலவற்றைக் கடந்து வந்தவர் என்றும் குறிப்பிட்டார் சிவா.
தொடர்புடைய செய்திகள்
அதனால்தான் ஆறு மாதத்துக்கு முன்பே தான் தயாரிக்கும் படத்தின் கதாநாயகனுக்கு முன்கூட்டியே ஊதியம் கொடுத்து மரியாதை தரும் அரிதான நிகழ்வை கமல்ஹாசனால் நடத்திக்காட்ட முடிகிறது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார் சிவகார்த்திகேயன்.
“திரு கமல் எப்படிப்பட்ட நடிகர் என்பது உலகத்துக்கே தெரியும். அவரைப் போல் நடிக்க இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என்பார்கள், ஆனால் இன்னொருவர் பிறந்து வந்தாலும் கமலைப்போல் நடிக்க முடியாது.
“தன்னை யாரும் ‘உலக நாயகன்’ என்று கூப்பிட வேண்டாமென்று சொல்லிவிட்டார். சரி, வேறு எப்படி கூப்பிடலாம் என்று யோசித்த போதுதான் இயக்குநர் மணிரத்னம் ‘விண்வெளி நாயகன்’ என்று குறிப்பிட்டார். அதுவும் சரிதான். எதற்காக உலகத்தைச் சுருக்க வேண்டும். விண்வெளி என்றே இனி குறிப்பிடலாம்.
“இந்தப் படத்தின் கதாநாயகி சாய் பல்லவிக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறினர்.
“திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் நேரமும் யாருக்கு அதிகம் என்று நான் ஒருநாளும் பார்த்ததில்லை. யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் படம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
“ஒருமுறை நடிகை குஷ்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அமரன்’ படத்தில் நீங்கள் உண்மையான கதாநாயகனாக இருந்திருக்கிறீர்கள்.
“காரணம், நீங்கள் திரையில் இல்லாத முக்கியான பத்து நிமிடங்களுக்கு, கதையை கதாநாயகி மட்டுமே சுமந்து செல்ல அனுமதித்திருக்கிறீர்கள் அல்லவா. அதுதான் கதாநாயகனுக்கான உண்மையான அம்சம். (ஹிரோயிசம்) என்று குறிப்பிட்டார்.
“அதற்கு, தான் திரையில் இல்லாத பத்து நிமிடங்களுக்கு கதாநாயகி கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் போதுதான், நான் அங்கே இருப்பதாக உணர்கிறேன் என குஷ்புவுக்கு பதில் அளித்தேன்,” என்று சிவகார்த்திகேயன் கூறியபோது மொத்த படக்குழுவினரும் கைதட்டி ஆமோதித்தனர்.
முன்னதாகப் பேசிய சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதாகப் பாராட்டினார்.
“இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க துணிச்சலும் நம்பிக்கையும் இருக்கும் ஒரு நடிகர் தேவை என்று இயக்குநர் ராஜ்குமார் கூறினார். அவரது நம்பிக்கை இப்போது வெற்றி பெற்றுள்ளது. நாயகனுக்கு இணையான முக்கியத்துவத்தை நாயகிக்கும் அளித்துள்ளார்.
“இந்தப் படம் வெளியாகி 100 நாள்களைக் கடந்து விட்டன. ஆனால், ஒரு நாள்கூட என்னைப் பார்க்கிறவர்கள் இந்தப் படம் குறித்து பேசாமல் கடந்து சென்றதே இல்லை.
“எனது பத்து ஆண்டுகால சினிமா பயணத்தில் இப் படியான நிகழ்வுகள் நடந்ததே இல்லை,” என்றார் சாய் பல்லவி.