தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு படத்தை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிடுகின்றன: புலம்பும் விஷ்ணு விஷால்

2 mins read
de0fde2b-4965-4f60-a9ae-e8239286511c
‘ஆர்யன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் யாரும் தமக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்று அண்மையில் பேசியிருந்தார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி திரைகாண்கிறது. இதையடுத்து இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விஷ்ணு விஷாலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “எந்த நடிகரும் உதவவில்லை என்று சொல்லவில்லை. என்னை அவங்க அடையாளப்படுத்தவில்லை என்ற சின்ன வருத்தம் இருந்தது, அவ்வளவுதான்,” என்று விளக்கம் அளித்தார்.

தம்முடைய ஒவ்வொரு படத்தையும் முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ஆறு தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து கைமாறியது என்றார்.

‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்துக்கு மூன்று தயாரிப்பாளர்கள் மாறிவிட்டனராம். ‘ராட்சசன்’ படத்துக்குப் பிறகு ஒன்பது பட வாய்ப்புகளைத் தாம் இழந்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்ட விஷ்ணு விஷால், இதனால் ஏற்பட்ட வலி, வருத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்றும் அதனால்தான் தாம் முழு நேரத் தயாரிப்பாளராக மாறியதாகவும் தெரிவித்தார்.

“அதனால் நான் நடிக்கும் அடுத்த ஐந்து படத்தை எனது நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும், வேறு நிறுவனங்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் பெரிதும் ரசிக்கும், விரும்பும் நடிகர்கள்கூட என்னுடைய படம் வெளியாகும்போது தொலைபேசியிலாவது அழைத்து வாழ்த்து தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், அந்தப் படம் வெற்றிபெற்ற பிறகு என்னுடைய இயக்குநரிடம் மட்டும் மறக்காமல் பேசிவிடுவார்கள். ஆனால், எனக்கு எந்த அழைப்பும் வராது.

“அண்மையில் இரண்டு படங்கள் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. எனவே, படக்குழுவினரை அழைத்துப் பேசினேன்.

“இதேபோல், என்னுடைய படம் வெளிவரும்போது யாராவது வாழ்த்தினால் எனக்கும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா?” என்றார் விஷ்ணு விஷால்.

குறிப்புச் சொற்கள்