விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் ‘பாம்’.
காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் தாஸ், தாம் இதுவரை நடித்த படங்களிலேயே சுவாரசிய அனுபவத்தை கொடுத்த படம் இதுதான் என்றார்.
“இதற்கு முன்பு ‘அநீதி’ என்ற படத்தில் காளி வெங்கட்டும் நானும் இணைந்து நடித்திருந்தோம். ஆனால் அதில் இரண்டு பேருக்குமான காட்சிகள் இல்லை. அந்தக் குறையை இந்தப் படம் நிவர்த்தி செய்துள்ளது,” என்றார் அர்ஜுன் தாஸ்.
இந்தப் படத்தில் காளி வெங்கட் உயிர் இல்லாத சடலமாக நடித்துள்ளாராம்.
“பல படங்களுக்கு, படப்பிடிப்பைத் தொடங்கும் முன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். ஆனால், சடலமும் ஒரு கதாபாத்திரமாக இருப்பதால் ஒத்திகை பார்க்க முடியவில்லை. இந்தப் படத்தில் நடித்தது அர்ஜுன் தாசுக்கு மட்டுமல்ல, இதில் பணியாற்றிய அனைவருக்குமே சுவாரசியமான, புதிய அனுபவமாக இருந்தது,” என்றார் காளி வெங்கட்.
இந்த நிகழ்வில் நடிகர் மணிகண்டன் கலந்துகொண்டு பேசும்போது, ‘பாம்’ படத்தில் பணியாற்றிய அனைவரும் தன்னுடைய நண்பர்கள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“மொத்தப் படக்குழுவினரும் பிரமாதமாகப் பணியாற்றி உள்ளனர். நான் பார்த்து வியக்கக்கூடிய நடிகர்களில் காளி வெங்கட்டும் ஒருவர்,” என்றார் மணிகண்டன்.
நீண்ட இடைவெளிக்குப் பின், இந்தப் படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அர்ஜுன் தாஸ் அர்ப்பணிப்புடன் நடிப்பார் என்றார்.
“அர்ஜுன் தாஸை ஒரு குறிப்பிட்ட வளையத்தில் அடைத்து வைக்கப் பலர் நினைத்தனர். ஆனால், தன்னுடைய முயற்சியால் அதை அவர் மாற்றி இருக்கிறார்.
“என்னைப் போன்றோர்க்கு அவர் ஒரு முன்மாதிரி. அவரைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்,” என்றார் மணிகண்டன்.
இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், “நான் வழக்கமாக கதாநாயகியைப் பார்த்துத்தான் படம் இயக்க விரும்புவேன். ஆனால், அர்ஜூன் தாஸைப் பார்த்தபின், நாயகனை முன்னிலைப்படுத்தி படமெடுக்கத் தோன்றுகிறது.
“படத்தின் நாயகி ஷிவாத்மிகாவை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகள்,” என்றார்.

