நமது எல்லைகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்: சன்னி லியோன்

2 mins read
97278938-24e8-4ecb-8136-a377e3f98d43
சன்னி லியோன். - படம்: ஊடகம்

நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் கடந்த பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் அண்மையில், கேரளாவில் மலையாள நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது என்று ஹேமா ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குத் திரை உலகிலும் சில நடிகைகள் தாங்களும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனால், ஒட்டுமொத்தத் திரையுலகமே நடிகைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொச்சியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 11) ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சன்னி லியோன், நடிகைகள் உட்படப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசினார்.

அதில், “என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து மட்டுமே இது குறித்து என்னால் பேச முடியும். மற்றவர்கள் தற்போது பேசும் வகையான பாலியல் தொல்லைகளை நான் சந்திக்கவில்லை,” என்றார் சன்னி.

மேலும், “நான் என் சொந்த அடையாளத்தையும் என் தொழிலையும் முழுமையாக நம்புகிறேன். படம் ஒன்றில் நடிக்க எனக்கு அதிகச் சம்பளமோ அல்லது வேறு ஏதாவது தேவையென்றால், அதற்காக நான் உடனடியாக குரல் கொடுக்கிறேன். எல்லோரும் அதையே செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என அவர் கூறினார்.

“இக்காலப் பெண்களுக்கு சுயமாக முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் எது சரி என்று நம்புகிறோமோ அதையே தேர்ந்தெடுக்க வேண்டும். எது தவறு என அவர்கள் நினைக்கிறார்களோ அதிலிருந்து அவர்கள் விலகி நடக்க வேண்டும்,” என்றார் சன்னி.

“நம் எல்லைகளை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கும் பல கதவுகள் மூடப்பட்டிருந்தன.

“ஆனால், நான் என் வேலையை முழுமையாக நேசித்த காரணத்தால், மூடப்பட்ட கதவுகள் எனக்கு ஒரு பிரச்சினையாகவேத் தெரியவில்லை. இந்த மாபெரும் உலகில், ஒரு வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, இன்னும் நூறு வாய்ப்புகள் நம் வழியில் வரும்,” எனப் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடிகை சன்னி லியோன் பேசினார்.

“எத்தகைய இழப்புகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்,” என்றார் அவர். 

சன்னி லியோனைத் தொடர்ந்து பிரபு தேவா பேசினார். “கடந்த சில ஆண்டுகளாகப் பாலியல் தொல்லைத் தொடர்பான புகார்கள் அதிகம் வந்துகொண்டு இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரபு தேவா கூறினார்.

‘பேட்ட ராப்’ படத்தை எஸ்.ஜே.சினு இயக்குகிறார். இப்படத்தில் சன்னி லியோனுடன் பிரபு தேவா, விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்