தனது ‘45’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகச் சென்னைக்கு வந்திருந்த கன்னடத் திரை நட்சத்திரம் சிவராஜ்குமார், “நடிகர்கள் அரசியலுக்கு வராமலே மக்களுக்கு நல்லது செய்யலாம்,” என்று கூறினார்.
சிவராஜ்குமார், உபேந்திரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘45’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த சிவராஜ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான எம்.ஜி.ஆர். முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால், கர்நாடகாவில் ஏன் அப்படியில்லை?” என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த சிவராஜ்குமார், “மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? நடிகராக இருந்துகொண்டே உதவி செய்யலாம். ஏனென்றால், இது என்னுடைய பணம். பாரபட்சம் பார்க்காமல் என்னால் உதவி செய்ய முடியும்,” என்று தெரிவித்தார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், “விஜய் அரசியலுக்கு வரும்போது அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். ஆனால், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளித்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

