தீவிர விஜய் ரசிகர்களுக்கு நடிகை மல்லிகா குறித்து அறிமுகம் ஏதும் தேவையில்லை. ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்யின் பாசக்காரத் தங்கையாக நடித்தவர்.
அமைதியாக இருக்கும் விஜய் போன்ற நல்லவர்களின் வளர்ச்சியை, ஒருசிலர் தடுக்க முயற்சி செய்வதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆட்டோகிராஃப்’, ‘உனக்கும் எனக்கும்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மல்லிகா, பின்னர் இயக்குநர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு திரையுலகை விட்டு விலகிவிட்ட அவர், தற்போது இரண்டு குழந்தைகள், கணவருடன் குடும்ப வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து வருவதாகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விஜய் குறித்து சொன்னதைப் பார்ப்போம்.
“விஜய் அதிகம் பேசமாட்டார். ஆனால், அரசியலுக்கு வந்துவிட்டால் நிறைய பேச வேண்டியிருக்கும். இப்போது அவரா இப்படிப் பேசுகிறார் என வியப்பாக உள்ளது. எனினும், தனது அமைதியான குணத்தை விட்டுவிட்டு மக்களுக்காகப் பேசத் தொடங்கி உள்ளார்.
“சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது ஒருவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ள அவரைப் புரிந்துகொள்ளாமல் சிலர் தப்பும் தவறுமாகப் பேசுகிறார்கள்.
“கரூர் சம்பவம் தொடர்பாக அவரை சிலர் குற்றஞ்சாட்டுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அந்தச் சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதாக நினைக்கிறேன். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் அவரது வளர்ச்சியை சில தரப்பினர் தடுப்பதாகவும் நினைக்கத் தோன்றுகிறது,” என்றார் மல்லிகா.

