வறுமையை முழுமையாக அனுபவித்தவர்களுக்குத்தான் வாழ்க்கையில் எது முக்கியம் என்பது நன்றாகப் புரியும். இந்த வரியை வாழ்நாள் முழுவதும் தம்மால் மறக்கவே இயலாது என்கிறார் நடிகை திவ்யபாரதி.
‘பேச்சுலர்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர். அந்த வாய்ப்பைப் பெற ஜிவி பிரகாஷ்தான் முக்கியக் காரணம் என்பதால் அவரை ஆயுசுக்கும் மறக்கவே இயலாது என்கிறார்.
ஜிவியுடன் சம்பந்தப்பட்ட யாரேனும் கண்ணில் பட்டால் உடனடியாக அவரது நலன் குறித்து விசாரிப்பது திவ்யபாரதியின் வழக்கம்.
“ஜிவிதான் திரையுலகில் எனக்கு முகவரி கொடுத்தவர். அவர் மிக நல்ல மனிதர். வாழ்க்கையில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அவர் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்கிறார் என்று யாராவது என்னிடம் சொல்லும்போது உற்சாகமாகிறேன்,” என்கிறார் திவ்யபாரதி.
கல்லூரியில் படித்தபோது திரையுலகம், நடிகை, ரசிகர் கூட்டம் குறித்தெல்லாம் இவர் யோசித்ததே இல்லையாம். அதிகம் பேசவும் மாட்டாராம். ஆனால், மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த பிறகு எல்லாம் மாறியிருக்கிறது. அதன் பிறகுதான் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் தம்மால் புரிந்துகொள்ள முடிந்தது என்கிறார்.
“சினிமா துறைக்கு வந்துவிட்டாலும், அதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை. எனக்கு எத்தகைய கதாபாத்திரங்கள், உடைகள், ஒப்பனை கச்சிதமாகப் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ளவே இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.
“நான் சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். அதனால் எளிமையாக இருக்க விரும்புவேன். சுய விளம்பரம் செய்துகொள்வது அறவே பிடிக்காது.
“தனிப்பட்ட வகையிலோ, திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளோ எதுவாக இருப்பினும் இரவு விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். இந்த விருந்து கலாசாரம் பிடிக்காது என்பதைவிட தெரியாது என்பதுதான் சரி. திரையுலக வாழ்க்கைமுறைக்கு நான் இன்னும் தயாராகவில்லை,” என்கிறார் திவ்யபாரதி.
தொடர்புடைய செய்திகள்
சரி.. இப்போது திரையுலகம் பற்றிய புரிதல் எந்த அளவில் உள்ளது?
“முக்கியமான ஓர் உண்மையைத் தெரிந்துகொண்டேன். இந்தத் துறையில்தான் பெண்களுக்கு மரியாதை, அவமானங்கள் என இரண்டுமே மிக அதிகம்.
“மேலும், திரையுலகில் ஒருவருக்கு கிடைக்கும் பணத்தைவிட, அதில் கிடைக்கும் புகழில்தான் போதை அதிகம். தவிர, இங்கு கண்ணுக்குத் தெரியாத நிறைய எதிரிகளும் இருப்பார்கள். மனத்துக்கு நெருக்கமான ஒருசிலரது நட்பு கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலிதான்.”
வருத்தம், மகிழ்ச்சி குறித்து?
“நான் நடித்த ‘கிங்ஸ்டன்’ படம் பெரிய வெற்றியைப் பெறும் என நினைத்தேன். ஆனால், படம் சரியாக ஓடவில்லை. எனினும் என் நடிப்புக்குப் பாராட்டு கிடைத்தது. மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தும் வெற்றி கிடைக்காததால் வருத்தம் அடைந்தேன்.
“அதேபோல், குடும்பப் பாரத்தைச் சுமக்கவும் குழந்தைகளுக்காகவும் அதிகாலையிலேயே எழுந்து பணிகளில் ஈடுபடும் வீட்டுப் பணிப்பெண்களைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும்.
“குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் விளையாடும்போது என்னையே மறந்து, மகிழ்ச்சியாக இருப்பேன். அத்தகைய தருணங்கள் எனது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் திவ்யபாரதி.

