சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் லிஜோ மோல்.
அப்படத்தில் ‘செங்கேணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லிஜோ மோல், தற்போது ‘உன்மதம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் அண்மையில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு திரைப்படமும் அதற்குப் பிறகு வாய்ப்புகளின் தன்மையை மாற்றுகிறது என்று அண்மைய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் லிஜோ மோல்.
அதேசமயம் ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களைப் பார்த்துவிட்டு அதேபோன்ற வேடங்களுடன் தம்மை அணுகும் இயக்குநர்கள் சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களில் நடிக்க யாராவது தமக்கு அழைப்பு விடுத்தால் முடியாது எனக் கூறிவிடுவாராம்.
இனி ஜாலியான, நகைச்சுவையான கதாபாத்திரத்திரங்களில் நடிப்பதே தமது விருப்பம் என்கிறார் லிஜோ மோல்.
அதற்காக நல்ல வாய்ப்புகள் அமையும்போது அதை ஏற்காமல் இருக்க முடியாது என்றும் லிஜோ மோல் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆனால், நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ‘பொன்மான்’ திரைப்படத்தில் ‘ஸ்டெஃபி கிராஃப்’ கதாபாத்திரமும் பல பரிமாணங்களைக் கொண்டதுதான். ஆனால், ‘ஜெய் பீம்’ கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
“ஒவ்வொரு நடிகரும் தங்கள் புதிய கதாபாத்திரம் முந்தையதைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். ‘உன்மதம்’ மலையாளப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஆழமான, உணர்ச்சிபூர்வமான பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.
“நான் கடைசியாக உண்மையிலேயே ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்தது ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்திற்குப் பிறகு வந்த ‘கட்டப்பனையில ரித்விக் ரோஷன்’ படத்தில்தான்.
“இப்போது யாராவது எனக்கு மீண்டும் நான் ஏற்கெனவே நடித்துள்ள ‘சௌமியா’ அல்லது ‘ஸ்டெஃபி கிராஃப்’ போன்ற கதாபாத்திரங்களைச் செய்யக் கொடுத்தால் நான் நடிக்க மாட்டேன்,” என்று கூறியிருக்கிறார் லிஜோ மோல்.


