பெங்களூர்: நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மனி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) வெளியாகிறது.
அதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ திரைப்படத் தொடரின் (cinematic universe) ஒரு பகுதியாக ‘ஜெய் ஹனுமான்’ உருவாகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாவதையொட்டி ‘ஜெய் ஹனுமான்’ படத்தைப் பற்றி ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார்.
அவர், “காந்தாரா: சாப்டர் 1 வெளியாவற்கு முன்பு மற்ற படங்களில் ஒப்பந்தமாக வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பிரசாந்த் வர்மா கதை சொன்னபோது, மறுக்க முடியவில்லை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். நாங்கள் ஒரு ஃபோட்டோஷூட்டையும் நடத்தினோம். அந்தப் படத்துக்கு முன்பு தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியான பிறகு பிறகு இதன் படப்பிடிப்பை இறுதி செய்து தொடங்குவோம்,” என்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் ‘ஜெய் ஹனுமான்’, 2027ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான ‘ஹனுமான்’ ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

