எப்போதுமே தன்னுடைய திரைப்படம் எப்படியான கதை, திரைக்கதை ஓட்டத்தைக் கொண்டிருக்கும் என்பதை வெளியே சொல்லமாட்டார் இயக்குநர் ஹெச்.வினோத்.
தன்னுடைய படம் குறித்து சிறு தகவலைக்கூட பொது வெளியில் பகிர்ந்துகொள்வதை விரும்பமாட்டார்.
ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக அண்மைய நிகழ்வில் அப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார் வினோத்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் சமயத்தில் திரைக்கு வருகிறது. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
“விஜய்க்கு ஏற்ற பிரம்மாண்டமான பிரிவு உபசார விழாவுக்கு நிகரானதாக இந்தப்படம் அமையும்.
அதிரடி, வணிகம் என அவரது படங்களில் எதை அதிகம் எதிர்பார்த்து ரசிகர்கள் வருவார்களோ, அவை அனைத்தும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் இது முழுமையான விருந்தாக அமையும்,” என்று கூறியுள்ளார் வினோத்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணன் கடந்த ஜூன் மாதமே கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், “தளபதியின் அசாதாரண சினிமா பயணத்திற்கான ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ‘ஜனநாயகன்’ பிரிவு உபசாரத்துக்கான படம் மட்டும் அல்ல. இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ‘ஐகானி’ன் கொண்டாட்டமாகவும் இருக்கும்,” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அனிருத் இசையமைக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பிறந்தநாள் பரிசாக படத்தின் முதல் விளம்பரக் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து இயக்குநர் வினோத்தின் பிறந்தநாளையொட்டியும் ‘திரைக்குப் பின்னால்’ எனக் குறிப்பிட்டு, சில காணொளிகள் வெளியிடப்பட்டன.