மீண்டும் ஒரு புது படத்தில் செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை ஜனனி. கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
பட நாயகனாக விதார்த்தும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கரும் நடிக்க உள்ளனர்.
மூன்றாவது முறையாக செய்தியாளர் கதாபாத்திரத்தில் தாம் நடிக்க உள்ளதாகவும், தமிழ் நடிகைகளில் தாம் மட்டுமே இந்த வேடத்தில் அதிகமான படங்களில் நடித்திருப்பதாகவும் சொல்லி சிரிக்கிறார் ஜனனி. இது தமிழ் சினிமாவில் மற்றொரு சாதனை என்றும் சொல்கிறார்.
“படத்தின் கதையை முழுமையாக என்னிடம் விவரித்த இயக்குநர் கிருஷ்ணகுமார், எந்தக் கோணத்தில் காட்சிகள் படமாக்கப்படும் என்பதையும் முன்பே விரிவாக புரிய வைத்துவிட்டார். மேலும் நான் எவ்வாறு நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள சில திரைப்படங்களை பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
“அந்தத் திரைப்படங்களைப் பார்த்ததன் பலனாக எனது கதாபாத்திரத்தை திரையில் காணும்போது எப்படி இருக்கும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டுள்ளேன்,” என்கிறார் ஜனனி.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப்படம் முழுநீள திகில் கதையாக உருவாகிறது. கதைப்படி ஒரு மர்மமான சக்தியும் படம் முழுவதும் பயணிக்கும். அந்த மர்மம் என்ன என்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல இயலாதாம்.
ஒரு மர்மத்தைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளவும் அது என்ன மாதிரியான மர்மம் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் தவிப்பதும் பார்ப்பதற்கு சுவையாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
“என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தில் எத்தனை பேர் நடிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. என்னுடைய கதாபாத்திரத்துக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதில்தான் கவனமான இருப்பேன். அதன் பிறகு எனக்கான கதாபாத்திரத்தின் மூலம் ஏதேனும் முத்திரை பதிக்க இயலுமா என்று யோசிப்பது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
“நமது திறமையை வெளிப்படுத்த உதவாத எந்த கதாபாத்திரமும் எனக்குத் தேவையில்லை. ஒரு படத்தில் அதிகமானோர் நடிக்கும்போது அவர்களின் ரசிகர்களையும் அந்தப்படம் சென்றடையும்,” என்று திரைத்துறை சார்ந்த கணக்குகளை அழகாக அடுக்குகிறார் ஜனனி.
இதற்கு முன்பு ‘அதே கண்கள்’, ’ஹாட்ஸ்பாட்’ படங்களில் இவர் செய்தியாளராக நடித்துள்ளார். எனினும் மூன்று படங்களுக்குமான கதைக்களம் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்குமாம். செய்தியாளர்களின் பணி, குடும்ப வாழ்க்கை ஆகியவை குறித்து ஓரளவு தமக்குத் தெரியும் என்கிறார்.
“இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், விதார்த்துடன் நடித்துள்ளேன். விதார்த் மிகத் திறமையான நடிகர் என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அவருடைய நடிப்புக்கு நானும் தீவிர ரசிகை. எம்.எஸ்.பாஸ்கர் குறித்து நான் பேசுவதை விட அவர் நடித்துள்ள படங்கள் அவரைப்பற்றி அதிகம் பேசும்.
பல படங்களில் அவர் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். மிகுந்த திறமைசாலிகளுடன் இணைந்து நடிப்பது நிச்சயம் ஒரு சவால்தான். அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்,” என்கிறார் ஜனனி.
அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’ படத்தில் நடித்து முடித்துள்ளாராம். கதைப்படி கௌதம் காவல்துறை அதிகாரியாகவும் சரத்குமாரின் மகளாக ஜனனியும் நடித்துள்ளனர். கதைப்படி கிராமத்துப் பெண்ணாக திரையில் வலம் வருவாராம்.
கிராமத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. அது தொடர்பாக பல்வேறு மர்மங்கள் உலா வருகின்றன. அது குறித்து காவல்துறையினர் நடத்தும் விசாரணை, அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.
இந்தப்படம் விரைவில் திரைகாண உள்ளது என்கிறார் ஜனனி.