‘ஜனநாயகன்’ மகன் ‘சிக்மா’

2 mins read
f9d8d278-91ba-4bf9-8cbf-153d7c2c2a56
ஜேசன் சஞ்சய். - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகர், அரசியல்வாதி என்னும் இருமுகங்களைக் கொண்ட விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளது தெரிந்த தகவல்தான்.

அவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘சிக்மா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது புதுத் தகவல். படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் இந்தப் பெயர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

‘சிக்மா’ குறித்து லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தமிழ் குமரன் கூறுகையில், “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95 விழுக்காட்டு படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை,” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறுகையில், “’சிக்மா’ என்ற தலைப்பிலான இந்தப் படம் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத ஒருவன், தம் இலக்குகளை நோக்கி நகர்வதைப் பேசும். வேட்டை, கொள்ளை, நகைச்சுவை என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது,” என்றார்.

கோடிகளைக் குவிக்கும் ‘ஜனநாயகன்’

பிள்ளை சாதனை புரிந்திருக்கும் வேளையில் தந்தையின் படமும் சாதனை புரிந்து வருகிறது .விஜய்யின் கடைசிப் படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ பட வர்த்தகம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ. 78 கோடிக்கும் அமேசான் பிரைம் ஒடிடி உரிமை ரூ.110 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடி மற்றும் ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை ரூ.260 கோடிக்குப் படம் விற்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, படத்தின் வடஅமெரிக்க உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்