சாய் பல்லவியை ஆச்சரியப்படுத்திய ஜப்பான் ரசிகர்

சாய் பல்லவியை ஆச்சரியப்படுத்திய ஜப்பான் ரசிகர்

2 mins read
25cdc151-d79b-4b96-b3da-e4b3628b121b
சாய் பல்லவி. - படம்: தி இக்கானமிக் டைம்ஸ்
multi-img1 of 3

அண்மையில் விடுமுறையைக் கழிக்க ஜப்பான் சென்று வந்துள்ளார் சாய் பல்லவி.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்ளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள அவர், அங்கு நிகழ்ந்த முக்கியமான ஒரு சம்பவத்தை ஊடகங்களில் சற்று தாமதமாகப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக, வெளிநாடுகளுக்குச் சென்றால் அதிகமாக பொருள்களை வாங்க மாட்டாராம்.

“காரணம் எக்குத்தப்பாக விலையை ஏற்றிச் சொல்வார்கள். இம்முறை ஏதாவது விலை குறைவான கைப்பை ஒன்றை வாங்க நினைத்தேன்.

“ஒரு பெரிய கடைக்குள் நுழைந்து பார்த்தபோது சாதாரணமாக காட்சியளித்த ஒரு பையைத் தேர்வு செய்தேன். பார்ப்பதற்கு சென்னையில் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் கைப்பை போன்றுதான் இருந்தது. ஆனால் அதன் விலையை அறிந்தபோது அதிர்ச்சியில் என் மூச்சுக்காற்றே நின்றுவிடும்போல் இருந்தது.

“உடனே அந்தப் பையை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுக் கிளம்பினேன். சிறிது நேரம் கழித்து என் தோழியுடன் நாங்கள் காரில் ஏறி கிளம்பும்போதுதான் அதைக் கவனித்தோம்.

“எங்கள் காரின் மேல் யாரோ தங்களுடைய ஷாப்பிங் பையை வைத்திருந்தனர். சுற்றும்முற்றும் பார்த்தபோது யாரையும் காணவில்லை,” என்று நடந்த சம்பவத்தை நினைவுகூறினார் சாய் பல்லவி.

ஒருவேளை யாராவது அந்தப் பையை வைத்துவிட்டு பிறகு அதை மறந்துவிட்டுக் கிளம்பி இருக்கக்கூடும் என்று நினைத்தாராம். சரி அருகில் உள்ள கடைக்காரரிடம் விவரம் கூறி பையை ஒப்படைக்கலாம் என்றும் நினைத்தாராம். ஆனால் பைக்குள் இருப்பது என்ன என்பதைப் பார்த்தபோது சாய் பல்லவிக்கு மிகுந்த ஆச்சரியம்.

காரணம், அந்தப் பைக்குள் இருந்தது அவர் வாங்க ஆசைப்பட்ட அந்தக் கைப்பை. யாரோ ஒருவர் சாய் பல்லவி என அடையாளம் கண்டு அந்தப் பையை பரிசளித்துள்ளார்.

யார் அவர் என்று தெரியாத நிலையில், கடைக்காரரிடம் விவரம் கேட்டபோது அவரும் விவரம் சொல்ல மறுத்துள்ளார். எப்படியோ ஒரு வழியாக அந்த அன்பான ரசிகரின் பெயரைக் கண்டு பிடித்துவிட்டாராம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ரசிகர் ஜப்பானில் வசித்து வருகிறார். சரி, அவர் எதற்காக இந்தப் பரிசைக் கொடுத்தார்? ஏன் தன்னைப் பற்றிய அடையாளத்தை மறைக்கிறார் என்பதற்கான பதில் தம்மிடம் இல்லை என்கிறார் சாய் பல்லவி.

அவரின் இந்த அனுபவத்தைப் படித்த ரசிகர்கள், ‘இது உண்மைக் கதையா? கட்டுக்கதையா?’ என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது ராமாயணம் இந்திப் படத்தில் நாயகியாக நடித்துவரும் சாய் பல்லவி, கேரளாவில் தனது சொந்த ஊரில் இலவச மருத்துவ மையம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம்.

மருத்துவத்தில் இவருக்குள்ள அதீத ஆர்வத்தை தெரிந்து வைத்துள்ள ரசிகர்கள் சாய் பல்லவியை வாழ்த்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்