தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய தொடக்க விழா நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகள் சேலத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய், இத்திரைப்படத்தின் விளம்பரப் பணிகளைச் சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
“சிக்மா படத்திற்காகக் கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்குப் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால் சேலத்துடன் தமக்கு நிறைய அழகான நினைவுகள் உள்ளன. தயாரிப்பாளர் சுபாஸ்கரன், தமிழ்குமரன், சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
“இத்திரைப்படத்தைச் சிறப்பாக இயக்கத் தமக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றி.
“நம் எல்லோர் வாழ்விலும் ஒரு ‘சிக்மா’ தருணம் கண்டிப்பாக இருக்கும்.
அதாவது, “கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவே நமது வாழ்க்கையை முற்றிலும் மாற்றும்.
“வாழ்க்கையை மாற்றக்கூடிய அந்த முடிவே ‘சிக்மா’ என்பதற்கான விளக்கம்,” என்றார் ஜேசன் சஞ்சய்.
நிறைவாக, “அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இத்திரைப்படத்தைப் பார்த்துத் தங்களது மேலான ஆதரவை அளிக்க வேண்டும்,” என்றும் அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

