ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் ‘ராமாயணா’, அதில் இடம்பெற்றுள்ள ஜடாயு காட்சி கைகொடுக்கும் என்று அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெரிதும் நம்பியிருக்கிறது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராமாயணா’ முதல் பாகம் இம்மாதம் (நவம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. உலகளவில் ரூ.1,700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கும் இந்தப் படம் ஆஸ்கர் போட்டியிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புக் காட்சிகளுக்கு (விஷுவல் எஃபெக்ட்ஸ்) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில நிமிடக் காட்சிகளுக்காக பல மாதங்கள் பணியாற்றியதாக படக்குழு தெரிவித்திருந்தது. குறிப்பாக, ஜடாயு பறவையின் காட்சிகளுக்கு அதிகமாக மெனக்கெட்டதாக அக்குழு கூறியிருந்தது.
சிறப்புக் காட்சிகளுக்கான பட்டியலில் டெனிஸ் வில்லெனுவேவின் ‘டூன்: பார்ட் த்ரீ’, கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’, பில் லார்ட்-கிறிஸ்டோபர் மில்லரின் ‘புராஜெக்ட் ஹெய்ல் மேரி’, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டிஸ்க்ளோசர் டே’, ஆண்டனி-ஜோ ரூசோ இயக்கிய மார்வெல் ஸ்டூடியோசின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உட்பட நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படமும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் டிஎன்இஜி விஷுவல் ஸ்டூடியோ இதுவரை இன்செப்ஷன் (2011), இன்டர்ஸ்டெல்லார் (2015), எக்ஸ் மெக்கினா (2016), பிளேட் ரன்னர் 2049 (2018), ஃபர்ஸ்ட் மேன் (2019), டெனெட் (2021), டியூன் (2022), டியூன்: பார்ட் டூ (2025) என எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
ராமாயணா படத்தினை உருவாக்கிய ஸ்டூடியோவும் இம்முறை ‘தி ஒடிசி’, ‘மோனா, ‘சூப்பர்கேர்ள்’, ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிஸ்னி நிறுவனத்தின், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, ஜான் ஃபேவ்ரோவின் ‘ஸ்டார் வார்ஸ்: தி மாண்டலோரியன் அண்ட் குரோகு’, ‘வேல்ஃபால்’, ‘மோனா’ ஆகிய நான்கு படங்களும் இப்பிரிவில் முன்னணியில் உள்ளன.
ஆஸ்கர் குறும்பட்டியலுக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி நிறைவடைகிறது. பல்வேறு பிரிவுகளுக்கான குறும்பட்டியல்கள் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் பரிந்துரைகள் ஜனவரி 21ஆம் தேதி அறிவிக்கப்படலாம்.
99வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 14ஆம் தேதி ஹாலிவுட்டின் டால்பி திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
