மறுபடியும் வெளியீடு கண்டு சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ‘வசந்த மாளிகை’. அந்த வெளியீட்டையொட்டி அந்த நாள் நினைவுகளை ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார் ‘வசந்த மாளிகை’ நாயகி வாணிஶ்ரீ.
“வசந்த மாளிகை படத்தில் நடிக்க வந்தபோது எனக்கு 17 வயது. படம் முடிந்து வெளியானபோது 18 வயசு. தெலுங்கில் வெளியான ‘பிரேம் நகர்’ படம்தான் தமிழில் ‘வசந்த மாளிகை’யாக வந்தது. இரண்டிலும் நான்தான் நாயகி. தெலுங்கிலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
“‘வசந்த மாளிகை’ படத்தின் நாயகியாக முதலில் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்து எடுத்தார்கள்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜெயலலிதாவோட அம்மா அந்த நேரத்துல இறந்துபோயிட்டாங்க. படப்பிடிப்புக்கு் ஜெயலலிதா வருவார்களா என்று யோசித்துக்கொண்டு இருந்த தயாரிப்பாளர் ராமநாயுடு என்னை நடிக்கக் கேட்டார்.
“சிவாஜி என்னும் இமயமலைக்குப் பக்கத்தில் ஒரு ஐஸ் கட்டியாக என்னை நினைத்துப் பயந்தேன். ‘தெலுங்கில் நீதானே நடித்தாய். பயப்படமா நடி’ன்னு உற்சாகப்படுத்தினார் ராமநாயுடு.
“அந்தப் படத்தில் நான் தமிழில் பேசியது எனக்குக் கிடைத்த வெற்றி.
என் பாத்திரத்துக்கு நான்தான் குரல் கொடுப்பேன்னு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். மீறி ‘டப்பிங்னு’ சொன்னால் படமே வேண்டாம் என்று சொன்னேன்.
“சிவாஜிகூட, ‘வாணி நிஜமா சொல்லு நீ தமிழ்ப்பொண்ணு தானே’ன்னு கேட்டார். என்னுடைய தமிழைக் கவனித்து அவர் வியந்தார். அது எனக்குப் பெருமையாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“நெல்லூர் தமிழ்நாட்டில் இணைந்து இருந்தபோதுதான் நான் பிறந்தேன். அப்படி என்றால் நான் தமிழ்ப் பொண்ணுதானே,” என்றார் வாணிஸ்ரீ.

