தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெயம் ரவி: உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியாகும்

3 mins read
65b31aeb-93de-4688-a644-cb75313fa597
(இடமிருந்து வலமாக) குஷ்பு, சுஜாதா, ஆர்த்தி, பிருந்தா, ஜெயம் ரவி. - படம்: ஊடகம்

மனைவியை விட்டுப்பிரிந்து செல்பவன் நல்ல மனிதன் அல்ல என்று நடிகை குஷ்பு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தமிழ்த் திரையுலகில் புதிய விவாதப் பொருளாக மாறிவிட்டது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியரின் பிரிவு குறித்து அவர் இவ்வாறு மறைமுகமாக விமர்சித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மனைவியைப் பிரிவதாக அறிவித்த கையோடு, ஜெயம் ரவி கடந்த சில நாள்களாக வெளியே இன்னும் தலைகாட்டவில்லை.

அவர் இவ்வாறு இருப்பது சரியல்ல என்றும் இதனால் அவரை நம்பியுள்ள தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் திரையுலக விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே மனைவி ஆர்த்திக்கு தமது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும் அது குறித்து ஏதும் தெரியாது என ஆர்த்தி ஏன் சொல்கிறார் என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

குழந்தைகளின் நலன் கருதியே தாம் ஏதும் பேசவில்லை என்று குறிப்பிட்ட அவர், அனைத்து உண்மைகளும் ஒரு நாள் நீதிமன்றத்தில் வெளிவரும் என்றார்.

தன்னை பாடகி கெனிஷாவுடன் தொடர்புபடுத்தி பேசுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் வேறு யாரையும் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நடிகை குஷ்பு தனது குடும்பத்தை போற்றுபவன்தான் உண்மையாகவே உயர்ந்த மனிதன் எனத் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியரின் திருமணத்தை முன்னின்று நடத்தியது குஷ்புதான் எனக் கூறப்படுகிறது.

வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி, ஜெயம் ரவியைக் காதலித்ததாகவும் அப்போது தன் நண்பர்களுடன் சிங்கப்பூருக்குச் சென்ற குஷ்பு அந்தப் பயணக்குழுவில் இருவரையும் இணைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

அப்பயணத்தின் போதுதான் ஜெயம், ஆர்த்தி இடையே காதல் மலர்ந்ததாக மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார்.

மேலும் இந்த நட்சத்திரத் தம்பதியினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் அவர் சில விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

“ஆர்த்தியையும் நடிகர் தனுஷையும் தொடர்புப்படுத்தி பேசுவது சரியல்ல. அதேபோல் ஜெயம் ரவி குறித்து வெளிவரும் பல தகவல்களும்கூட பொய்யானவைதான்.

“ஆர்த்தி தன் கணவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். எனினும் ரவி மீது அவருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் இந்த நிலை உருவாகக் காரணம்.

“ஜெயம் ரவி மனைவியுடன் அமர்ந்து பேசியிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல் அவர் பிரச்சினையைத் தள்ளிப்போட்டபடி இருப்பதுதான் சிக்கல்,” என்கிறார் ஆர்.எஸ்.அந்தணன்.

இந்நிலையில், ரவியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் குஷ்பு.

“திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். தவறுகளும் நடக்கும். அதற்காக ஒரு மனிதன் தன் குடும்பத்தை விலக்கி வைக்கக்கூடாது.

“ஒரு கட்டத்தில் இருவருக்குமான அன்பு குறையலாம். ஆனால் மரியாதை குறையக்கூடாது,” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஆர்த்தியின் தாயாரான தயாரிப்பாளர் சுஜாதாவும் குஷ்புவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஆட்டோவில் வந்து இறங்கினார் ஜெயம் ரவி.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியீடு காண உள்ள நிலையில், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஜெயம் ரவி புறக்கணித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் இசைவெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டார்.

“என் பெற்றோர் எனது முடிவை ஏற்றுக்கொண்டனர். என் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு முக்கியம். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தவிதமான கிசுகிசுகளுக்கும் நான் ஆளானது கிடையாது.

“இந்நிலையில் இன்னொரு பெண்ணுடன் என்னைத் தொடர்புப்படுத்தி பேசுவது சரியல்ல. ‘வாழு வாழவிடு’ என்பதைத்தான் இந்த தருணத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்,” என்றார் ரவி.

பாடகி கெனிஷா என்பவருடன் ஜெயம் ரவி நெருக்கமாக இருப்பதாகவும் அதனால்தான் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் கெனிஷாவுடன் இணைந்து ஆன்மிக மையம் தொடங்கி மக்களுக்கு உதவுவதே தமது நோக்கம் என ரவி தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்