சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தரமான படங்களைக் கையில் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். ‘சூரரைப் போற்று’ படத்திற்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பினை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘புறநானூறு’ என்ற படம் உருவாக இருந்தது.
ஆனால், ஒருசில காரணங்களால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் சுதா கொங்கரா.
இந்த இருவரின் இணைப்பு கோலிவுட் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால் அதில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் சுதா கொங்கரா.
இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வலைப்பேச்சு அந்தணன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இவரது கைவசம் ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’, கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவை உள்ளன. இந்தச் சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயரம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இப்படத்தில் நடிக்க விஷாலிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ‘எஸ்கே 25’ படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள இதில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். மேலும், ஜி.வி.பிரகாஷ் 100வதாக இசையமைக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.