‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடித்திருப்பதை ரசிகர்கள் பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் ரவிமோகன்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வருத்தம் அளித்தாலும், அவர் திரை வாழ்க்கையில் கச்சிதமாகச் செயல்படுகிறார்.
’கராத்தே பாபு’, ’ஜீனி’, கார்த்திக் யோகியின் பெயரிடப்படாத படம் ஆகியவை ரவி மோகன் நடிப்பில் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுள் ‘கராத்தே பாபு’ படத்தை ‘தாதா’ பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இது முழுநீள அரசியல் படமாம். ரவிக்கு ஜோடியாக சப்டி ஜிவால் நடிக்கிறார். மேலும் நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் காணொளி ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானபோது அதில் காணப்பட்ட தமிழக சட்டப்பேரவை அரங்கு, உண்மையான பேரவைப் போல் இருப்பதாகப் பலரும் பாராட்டியிருந்தனர். அதன் பிறகு ‘கராத்தே பாபு’ குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில், ‘பராசக்தி’ படம் வெளியாகிவிட்டதால், ரவி நடிப்பில் அடுத்து ‘கராத்தே பாபு’ திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ‘ரவி மோகன் ஸ்டுடியோ’ என்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைச் சொந்தமாகத் தொடங்கினார் ரவி.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ’ப்ரோ கோடு’ என்ற படம் உருவாகிறது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கியுள்ள கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். இதில் எஸ்ஜே சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
படத்தின் தலைப்பு தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாம். அதனால் தற்காலிகமாக தலைப்பைப் பயன்படுத்தினாலும் வேறு தலைப்பை பரிசீலிப்பதாகத் தகவல்.
முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘கில்லர்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு ஓய்வில் இருந்து வரும் எஸ்ஜே சூர்யா, உடல்நலம் சரியானதும் படப்பிடிப்பில் இணைவாராம்.
இதற்கிடையே, தாம் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரவி.
இந்தப் படத்தில் யோகி பாபுதான் கதாநாயகன் என்பது தெரிந்த தகவல்தான். ‘கோமாளி’ படத்தில் ரவியும் யோகி பாபுவும் இணைந்து நடித்தபோதே தாம் எழுதிய கதையை யோகியிடம் கூறினாராம் ரவி.
கதையைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட யோகி பாபு, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று உடனுக்குடன் வாக்குறுதி அளித்துள்ளார். மிக விரைவில் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகக்கூடும்.
இதனிடையே, ‘ஜீனி’ படம் கற்பனை கலந்த அழகான காதல் கதையாக உருவாகி வருகிறது. மிஷ்கினின் சீடர் அர்ஜுனன் இயக்குகிறார். இதில் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி என மூன்று முன்னணி நாயகிகள் நடிக்கின்றனர்.
இந்தப் படங்களையெல்லாம் முடித்த பின்பு, ‘மிருதன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரவி திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

