சுவாமி ஐயப்பனை மையப்படுத்தும் இரு திரைப்படங்கள்

ஜே.கே. சரவணாவின் தயாரிப்பில் உருவாகின்றன

சுவாமி ஐயப்பனை மையப்படுத்தும் இரு திரைப்படங்கள்

2 mins read
18c7a456-9127-48f6-89a8-488008c609f9
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் (இடமிருந்து) கலை இயக்குநர் ராஜீவன், இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஜே.கே.சரவணா, இயக்குநர் ஆதித்யா தங்கிராலா, ‘தந்த்ரா’ நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜே.கே.சத்தீஸ் குமார். - படம்: தந்த்ரா ஃபிலிம்ஸ்

சிங்கப்பூர்த் தயாரிப்பாளர் ஜே.கே.சரவணாவின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பன் பற்றிய இரு பிரம்மாண்டத் திரைப்படங்கள் உருவாகவிருக்கின்றன.

அவை ஆன்மிக உணர்வையும் வரலாற்றுப் பெருமையையும் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியாக அமையவுள்ளன.

சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் தமிழக இயக்குநர் வெங்கட் பிரபு, திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சியைத் தொடங்கிவைத்தார்.

ஜே.கே.சரவணா இணைத் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 600028’ தொடக்கவிழாவும் இதே கோவிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இரு திரைப்படங்களின் தலைப்புகளையும் வெள்ளிக்கிழமை தமது சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டார் வெங்கட் பிரபு.

‘தத் த்வம் அஸி’ (Tat Tvam Asi) எனும் முதல் திரைப்படத்தை இயக்குவது, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ‘மாளிகப்புரம்’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர்.

ஆன்மிகக் கதைகளை உணர்வுபூர்வமாகத் திரையில் சொல்லும் விஷ்ணு சசி சங்கரின் அனுபவம், தமிழில் ‘அதுவாகவே நீ இருக்கிறாய்’ எனப் பொருள்படும் ‘தத் த்வம் அஸி’ படத்திற்கு மிகுந்த வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம், சுவாமி ஐயப்ப பக்தர் ஒருவரின் வாழ்வையும் அவரது அசைக்கமுடியாத நம்பிக்கையையும் மையப்படுத்துகிறது.

‘ஆர்ய கேரள வர்மன்’ எனும் இரண்டாவது திரைப்படம், 16ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாகும் காவியமாகும். இந்தப் படம் இதுவரை அதிகம் பேசப்படாத சுவாமி ஐயப்பனின் தன்வரலாற்றையும், அவரது வீரத்தையும், ஆன்மிகத் தத்துவத்தையும் மையமாகக் கொண்டிருக்கும்.

ஜே.கே.சரவணா, ஆதித்யா தங்கிராலா இருவரும் இணைந்து இத்திரைப்படத்தை இயக்கவுள்ளனர்.

இரு திரைப்படங்களையும் பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்