‘சிவா மனசுல சக்தி’ (எஸ்எம்எஸ்) திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜீவா, சந்தானம், இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் அதேபோன்று இன்னொரு படம் வெளியாகாதா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.
கடந்த 16 ஆண்டுகளில் பத்து படங்கள்தான் இயக்கியுள்ளார் ராஜேஷ். முகம் சுளிக்கவைக்காத நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கும் இயக்குநர்களில் தனி இடத்தைப் பிடித்தவர். தற்போது இவரது இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகிறது ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ (ஜியோ) திரைப்படம்.
“காதலிக்கத் தொடங்கி, திருமணமாகும் வரை காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் பல சுவாரசியங்கள், சிக்கல்கள் இருக்கும். அந்த சுவாரசியங்களைத்தான் இப்போது கதைக்கருவாக கையில் எடுத்திருக்கிறேன். இந்தத் தலைமுறையில் காதலில், காதலிப்பதில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன. அவற்றையெல்லாம் இன்றைய இளையர்களின் ரசிப்புத்தன்மைக்கேற்ற வகையில் காட்சிப்படுத்தி உள்ளேன்,” என்கிறார் ராஜேஷ்.
ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். ‘லவ் டுடே’ படத்தில் இவானாவின் நடிப்பு பேசப்பட்டது.
“இவானா உண்மையில் மிகுந்த அப்பாவி. யார் எது சொன்னாலும் நம்பிவிடுவார். அப்படியோர் அப்பாவியான வேடத்தில் அழகாக நடித்துள்ளார்.
“தேசிய விருது பெற்ற எம்.எஸ். பாஸ்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் பங்களித்துள்ளார். ஜீவாவின் நண்பராக பிரபல யூடியூபர் சுதாகர் நடிக்கிறார். சுதாகரிடம் நம் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற இயல்பு இருக்கும். அந்த இயல்பு படத்தில் அவ்வளவு அழகாக வெளிப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த நடிகராக சுதாகர் உருவெடுப்பார்,” எனப் பாராட்டுகிறார் ராஜேஷ்.
இந்தப் படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ராஜேஷ்-யுவன் சங்கர் கூட்டணி.
“இப்படத்துக்கு இரண்டே நாள்களில் நான்கு பாடல்களைத் தயார்செய்துவிட்டாராம் யுவன். ஒரு பாடலை அவரே பாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“முன்பெல்லாம் பாடல்களுக்கு மெட்டமைப்பது எளிதாக இருந்தது என்பேன். ஆனால், இப்போது அப்படியல்ல. நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது. இளையர்களுக்குப் பிடித்த இசையைக் கொடுக்க வேண்டும்.
“யுவனைப் பொறுத்தவரை நாம் மாற்றங்களைச் சொன்னாலும், அதற்கேற்ப அனைத்தையும் மாற்றிக்கொடுக்கத் தயாராக இருப்பார். ஏன், எதற்காக மாற்றச் சொல்கிறீர்கள் என்பதுபோன்ற கேள்விகளே இருக்காது.”
ஜீவாவைப் பற்றி?
“ஜீவா எனக்கு மிகவும் பிடித்த நாயகன் மட்டுமல்ல, என் முதல் பட நாயகனும் அவர்தான். இன்றும்கூட அவரது வேகம், திறமை, தோற்றம் என எல்லாம் அப்படியேதான் உள்ளது. எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
“சக நடிகர்கள் மட்டுமன்றி, படப்பிடிப்பின்போது அங்குள்ள அத்தனை பேரிடமும் நன்றாகப் பேசிப்பழகி, நட்பு பாராட்டுவார் ஜீவா.
“அவருக்காக எழுதியதுதான் இந்த ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் கதை. சுருக்கமாக ‘ஜியோ’. இந்தப் புதிய படமும் அனைவருக்கும் பிடித்த படைப்பாக அமையும் என நம்புகிறேன்,” என்கிறார் ராஜேஷ்.

