வசன சர்ச்சை குறித்து ஜீவா விளக்கம்

1 mins read
5cff17f2-fcd7-4121-a536-4d5edf40d6c6
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா. - படம்: இந்து தமிழ் திசை

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசனம் மூலம் உருவான சர்ச்சைக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார்.

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஒரு காட்சியில் “படிச்சு படிச்சு சொன்னேன்டா” என்று வசனமொன்றைப் பேசியிருப்பார் ஜீவா.

இந்தக் காட்சிக்குத் திரையரங்கில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜீவா, “சமூக ஊடகத்தில் ஈர்க்கும் விஷயத்தை வைத்துத்தான் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறோம். காட்சிக்கு நடுவே இந்த வசனத்தைப் பேசினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னார். அதை நானும் செய்தேன், அதற்குப் பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தும் நோக்கில் அதை பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுது கொண்டே பேசிய காணொளிப் பதிவொன்று இணையத்தில் அதிகமாகப் பரவியது. அந்த வசனத்தைத்தான் ஜீவா ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் பேசியுள்ளார்.

கடந்த 15ம் தேதி வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கினார்.

மூன்று நாளில் இப்படம் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரைப்படம்கரூர்