‘தேவரா’ படத்தைப் பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்காக மேடையில் நடனமாடினார் ஜுனியர் என்டிஆர்.
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தேவரா’. சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதற்காக படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு படத்திற்காக விளம்பர நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினர். மேலும் ரசிகர்களுக்காக பிரிமீயர் காட்சி ஒன்று நடைபெற்றது. ஜப்பான் ரசிகர்கள் ஆர்வமாகப் படம் பார்க்க வந்து அரங்கை நிறைத்தனர்.
அப்போது சில ஜப்பான் ரசிகர்கள் மேடையில் ‘தேவரா’ பாடலுக்கு நடனமாடினர். அவர்களுடன் இணைந்து ஜுனியர் என்டிஆரும் நடனமாடினார். அதைக் கைத்தட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர் ரசிகர்கள்.
‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்கள் ஜப்பான் நாட்டில் நல்ல வசூலைப் பெற்றன. அதுபோல ‘தேவரா’ படமும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.