ஜோதிகா, வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட ‘டப்பா கார்டெல்’ (Dabba Cartel) என்ற இணையத்தொடரில் நடித்திருக்கிறார்.
இந்த இணையத்தொடரின் விளம்பர நிகழ்ச்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்தது. அப்போது அந்த இணையத்தொடரில் நடித்திருக்கும் ஜோதிகா, ஷபானா ஆஸ்மி ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தங்கள் தலையில் டப்பாவை வைத்துக்கொண்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள்.
மேலும் அந்த நிகழ்ச்சியின்போது ஷபானா ஆஸ்மியின் காலைத்தொட்டு ஜோதிகா ஆசி பெற்ற புகைப்படங்களும் வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.
இந்த ‘டப்பா கார்ட்டெல்’ இணையத் தொடரில் சபானா ஆஸ்மி, ஜோதிகா மட்டுமின்றி அஞ்சலி ஆனந்த், ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த இணையத்தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அன்றைய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிகா, “காதலை மையப்படுத்திய படங்கள், நாயகர்களுடன் காதல் பாடல் பாடும்படியான படங்களில் நடிப்பதை நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன்.
“இப்போது எனக்கு 47 வயதாகிறது. நாயகர்களைச் சுற்றி ஓடுவது, காதல் மையமான படங்கள் எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது.
“இந்த இணையத்தொடர் பெண்களுக்குத் தேவையான ஒன்று. பெண்களின் பார்வையிலிருந்து இந்த இணையத்தொடரை எடுத்து இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“இதுவரை இப்படி ஒரு கதை வந்தது கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் இதில் பேசியிருக்கிறோம்.
“என்னுடைய கதாபாத்திரம் நல்ல ஆழமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பல பெண்கள் இந்த இணையத்தொடரில் என்னுடைய கதாபாத்திரத்துடன் இணைவார்கள்,” என்றார்.
இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்த சூர்யாவும் ஜோதிகாவும் அண்மையில் மும்பைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் குடும்பத்தில் பிரச்சினைதான் என்று கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அதனைத் திட்டவட்டமாக இரண்டு பேரும் மறுத்தார்கள்.
முக்கியமாக ஜோதிகா இத்தனை ஆண்டுகள் எனக்காக சென்னையில் இருந்தார். இப்போது அவருக்காக மும்பைக்கு நான் சென்றதில் என்ன தவறு என கேட்டு சூர்யா அனைவரின் வாயையும் மூடினார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஜோதிகாவும் சூர்யாவும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்படி பாலிவுட்டில் முழு கவனம் செலுத்த மும்பையில் இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்பதால் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள் என்கிற பேச்சும் ஓடுகிறது.
ஜோதிகா கடைசியாக ‘ஷைத்தான்’, ‘ஸ்ரீகாந்த்’ ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்திருந்தார்.