1981ல் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அந்த 7 நாட்கள்’. 44 ஆண்டுகளுக்குபின் இதே தலைப்பில் மற்றொரு படம் உருவாகி உள்ளது. படத்தை இயக்குபவர் பாக்யராஜ் சீடர் எம்.சுந்தர். இந்தப் படத்தில் பாக்யராஜ் அமைச்சராக நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய இயக்குநர் எம்.சுந்தர், “இந்தத் தலைப்புக்கும் அந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பாக்யராஜிடம் பணியாற்றியதால் ‘டார்லிங் டார்லிங்’, ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பை பற்றி யோசித்தேன். இக்கதைக்கு 7 நாட்கள் தொடர்பு என்பதால் இதையே முறைப்படி உரிமம் வாங்கினேன்.
“அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா நடிக்கின்றனர். கதாநாயகர் வானியல் பற்றி படிப்பவராகவும் கதாநாயகி வழக்கறிஞராகவும் வருகின்றனர். சூரிய கிரகணத்துக்கும் கதைக்கும் தொடர்புள்ளது. சென்னையிலும் ஒரு மலைப் பிரதேசத்திலும் கதை நடக்கிறது. என் மகன் சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். என் குருநாதரை அமைச்சராக நடிக்க வைத்துள்ளேன். அவரும் அக்கறையுடன் நடித்துள்ளார்,” என்றார்.

