‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்த கே.எஸ். ஐஸ்வர்யா எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாதவர்.
அடிப்படையில் இவர் ஒரு கபடி வீராங்கனை. தமிழ்நாடு மாநில கபடி அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றவர்.
கொவிட் தொற்று காலத்தின்போது ஒரு புதுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அந்த அனுபவம் நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது என்றும் சிறு சிறு வாய்ப்புகளுக்குப் பின் தற்போது திரையுலகில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறுகிறார் கே.எஸ்.ஐஸ்வர்யா.
தென்னிந்தியத் திரையுலகில் பல ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் கே.எஸ். என்று தனது இனிஷியலில் சேர்த்துக் கொண்டுள்ளார். ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தை அடுத்து நட்டி நடராஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உள்ளாராம்.
தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் ஐஸ்வர்யாவைப் பார்க்க முடியும்.
“சிறு வயது முதலே நான் நயன்தாராவின் தீவிர ரசிகை. அவர் கடின உழைப்பால் அடைந்த உயர்வைப் பார்த்து பலமுறை வியந்துள்ளேன்.
“நடிக்க வந்தபோது ஆரம்பகால நயன்தாராவைப்போல் இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரைப்போல் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை,” என்கிறார் ஐஸ்வர்யா.
மேலும் புதுப் புது கதைக்களங்களோடு வரும் இயக்குநர்களின் படைப்புகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்புகிறாராம். கபடி விளையாட்டைக் கைவிட்டது வருத்தம் அளிக்கவில்லையா என்று கேட்டால், நீண்ட யோசனைக்குப் பிறகே, நடிப்புத் துறையில் சாதிக்க வேண்டும் என முடிவெடுத்ததாகச் சொல்கிறார் கே.எஸ்.ஐஸ்வர்யா.

