ரூ.300 கோடியில் தயாராகும் பாலிவுட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

ரூ.300 கோடியில் தயாராகும் பாலிவுட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்

2 mins read
e86359b5-1d92-4a36-a85a-ed97dc1b5c3a
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: இன்ஸ்டகிராம்

தமிழ், மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், தற்போது இந்தித் திரையுலகிலும் தனது கொடியை நாட்டத் தயாராகிவிட்டார்.

‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ திரைப்படத்தில் கதாநாயகியாக மிரட்டி, இந்திய அளவில் கவனம் ஈர்த்த இவருக்குப் பல மொழிகளிலிருந்தும் புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகளான கல்யாணி, அமெரிக்காவில் கட்டடக்கலை பட்டம் பெற்றவர்.

உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர், 2017ல் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் ‘மாநாடு’, ‘ஹிருதயம்’, ‘தள்ளுமாலா’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி இடத்தைப் பிடித்தார்.

ஃபிலிம்ஃபேர், சீமா விருதுகளை வென்றுள்ள இவர், தற்போது தமிழில் ‘ஜீனி’ போன்ற பிரம்மாண்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட் நட்சத்திர நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் ‘பிரளய்’ என்ற பிரம்மாண்ட ‘ஜாம்பி த்ரில்லர்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கல்யாணி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏறக்குறைய 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலிவுட்டின் மிகப்பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், அவர் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கிறார். இதற்காக அனைத்துலகப் பயிற்சியாளர்களிடம் அவர் சிறப்புச் சண்டைப் பயிற்சிகளைப் பெறவுள்ளார்.

இப்படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இதற்கிடையே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘லோகா அத்தியாயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்அமெரிக்காசண்டைஒப்பந்தம்