‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு முடிவுக்கு வரவிருக்கிறது. அடுத்து ஓரிரு நாள்களில் பூசணிக்காய் உடைத்துப் படப்பிடிப்பை நிறைவுசெய்ய உள்ளனர்.
இதற்கிடையே, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ரஜினியின் ‘173’வது படத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. அநேகமாக, ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து கதைநாயகர்களாக நடிக்கும் படத்தை ‘ரெட் ஜெயன்ட் மூவி’ மட்டுமே தயாரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.
முன்னதாக, ராஜ் கமல் நிறுவனமும் தயாரிப்பில் இணையும் எனக் கூறப்பட்டது. ரஜினி, கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில்தான் தொடங்குமாம்.
ஆனால், அதற்கு முன்னதாகவே வரும் மார்ச் மாதம் அப்படத்தின் அறிமுகக் காணொளியை வெளியிட உள்ளனர். இதில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
எதற்காக இவ்வளவு முன்னோட்டக் காட்சித்தொகுப்பை வெளியிட வேண்டும் என்ற கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது. தற்போது ஓடிடி நிறுவனத்தினர் பெரும் பொருள்செலவில் தயாராகும் முன்னணிக் கதாநாயகர்களின் படங்களை மட்டுமே வாங்குகின்றனர்.
அதிலும் அடுத்த ஆண்டு வெளியாகும் படத்துக்கான உரிமையை வாங்குவது தொடர்பாக இந்த ஆண்டே முடிவு செய்துவிடுகின்றனர். எனவேதான் முன்னோட்டக் காட்சிகளை இப்போதே படமாக்கி வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
“இதன் மூலம் இந்தப் படத்தில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்து அனைவருக்கும் தெரியவரும். இதனால் படத்தின் தரம் குறித்து ஓடிடி நிறுவனங்கள் முன்கூட்டியே ஓரளவு முடிவுக்கு வரமுடியும் என்று கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் படத்துக்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்வார் என்பதுதான் அண்மைய தகவல். சிறந்த ஒளிப்பதிவாளரான அவர் இயக்குநரான பின்னர், ஒளிப்பதிவு செய்யும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அவரை மீண்டும் அழைத்து வரவிருக்கின்றனர்.
முன்னதாக, இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. பின்னர் அவருக்குப் பதில் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாம்.
இந்தப் படம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்தத் தகவலையும் காணோம்.
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ள அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

