யாருடைய ரசிகர்கள், என்ன மொழி, எந்த மாநிலம் எனும் பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களும் ‘தக் லைஃப்’ என்ற படத்தலைப்பைத்தான் முணுமுணுக்கிறார்கள்.
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினர்.
கேரள மாநிலம், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், இப்படத்தில் நிறைய திறமையான ஆட்கள் வேலை பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான், ரவி.கே.சந்திரன் ஆகியோரை அவர் சுட்டிக்காட்டினார்.
“தனது ‘மருதநாயகம்’ திரைப்படம் வெளிவந்திருந்தால், இந்நேரம் ரவி இங்கு இருந்திருக்க மாட்டார். அனைத்துலக சினிமாக்களில் மட்டுமே இருந்திருப்பார். அவர் இங்கு இருப்பதில் எனக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.
“இப்படத்தின் ஒலிக்கலவைப் பணி என்னுடைய புதிய ஸ்டூடியோவில்தான் நடந்தது. அதில் எனக்கு பெருமை. இந்தப் படத்தில் பாடியுள்ள அனைத்துப் பாடகர்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்,” என்றார் கமல்.
தாமும் சில வரிகள் பாடியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் ஒரு பாடல் எழுதியும் இருப்பதாகத் தெரிவித்தார்.
‘தக் லைஃப்’ திரைப்படம் பழைய, புதிய திறமைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கிய படைப்பு என்றும் எப்போதும் விமர்சனங்களை முதலில் வரவேற்பதே தமது பழக்கம் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
“காந்தியின் சிந்தனையில் வன்முறை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது. அந்த வன்முறையை எப்படிப்பட்ட துணிச்சலுடன் நீங்கள் கையாளப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
தொடர்புடைய செய்திகள்
“மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா எல்லோருமே காந்தியின் ரசிகர்கள். நானும்தான். நானும் இங்கு சிறந்தவராக மாறுவதற்குத்தான் வந்துள்ளேன். சினிமாவுக்கு நல்ல நடிகர்கள்தான் தேவை,” என்றார் கமல்.
இன்று கதாநாயகனாக இருப்பவர், நாளை வில்லனாக மாறலாம் என்றும் இந்த மாற்றம் எல்லாத் துறைகளிலும் பொருந்தும் என்றும் குறிப்பிட்ட அவர், ரசிகர்கள் தம்மை இன்னும் 100 ஆண்டுகள் கதாநாயகனாக நினைவில் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் எனக் கூறப்பட்டபோது நான் இதில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அப்போதே எங்கள் ஜோடி (சிம்பு-திரிஷா) திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும் அதேநேரம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்குத் தெரியும். இதையெல்லாம் யோசித்த பிறகே இந்தப் படத்தில் கையெழுத்திட்டேன்.
“கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் எவ்வளவு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை திரைக்குப் பின்னால் பார்ப்பது பெரிய அனுபவம். அதுவும் ஒரு மாயாஜாலம் போல இருந்தது,” என்றார் திரிஷா.
இதனிடையே, ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘நாயகன்’ படத்தில் இருந்து கிடைத்த ஒரு பொறிதான் ‘தக் லைஃப்’ என்று கூறியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
ஒரு கதைக்கு நடிகர்கள் அமைவது முக்கியம் என்றும் அவர்கள் சரியாக அமைந்தால் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி பொருத்தமாக இணைத்துவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நானும் கமலும் நிறைய முறை சந்தித்துப் பேசியுள்ளோம். இருவரும் இணையும் அடுத்த படம் ‘நாயகன்’ மாதிரி இருக்கக் கூடாது என்று முதலில் முடிவு செய்தோம்.
“கமல் ஒரு கதை வைத்திருந்தார். அதில் எனக்கு ஓர் அம்சம் பிடித்திருந்தது. அதை மெருகேற்றினோம். ஏறக்குறைய ‘நாயக’னில் இருந்த ஒரு பொறி எனலாம். அதுதான் இப்போது திரைப்படமாகிறது,” என்று அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் மணிரத்னம்.
‘தக் லைஃப்’ என்று படத்துக்குப் பெயர் சூட்டியதும் கமல்தானாம்.