இந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனுக்கு 69 வயதானபோதும், முன்னேறி வரும் தொழில்நுட்பத்தின் மீதான காதலும் அதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இன்னும் சிறிதளவும் குன்றாமல் உள்ளது.
அதனால், அமெரிக்காவில் உள்ள ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்துப் பாடம் பயில்வதற்காக கமல்ஹாசன் சென்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த 90 நாள் படிப்புக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்ற அவர், அங்கு 45 நாட்கள் மட்டும் தங்கி படிக்க இருப்பதாகவும் அதன்பின்னர் தனது திரைப்படப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அவர் இந்தியா திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள தனது படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து அறிந்துகொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முதல் மின்னியல் படம், மென்பொருளைக் கணினி வழியாகப் படத்தில் பயன்படுத்தியது, முழு நீள மௌனப் படம், நேரடியாக குரல் ஒலிப்பதிவு, சிடி வடிவில் படங்களைப் பதிவு செய்வது, ஆஸ்கர் விருதுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என கமல்ஹாசன் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு எப்போதுமே புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்வதில் தாளாத ஆர்வம் உள்ளது. எனது திரைப்படங்களில் புதிய தொழில் நுட்பங்களையும் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறேன்.
“சினிமாதான் எனது வாழ்க்கை. என் சம்பாத்தியம் அனைத்தும் பலவழிகளிலும் எனது படங்களுக்காகச் சென்றுவிட்டது.
“நான் ஒரு நடிகன் மட்டுமல்ல; தயாரிப்பாளராகவும் உள்ளேன். திரைப்படங்கள் மூலம் நான் சம்பாதித்த அனைத்தையும் தொழில்துறையில் மீண்டும் முதலீடு செய்து வருகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 60 ஆண்டுகளாக திரையுலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் கமல்ஹாசன், அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

